
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ‘நாயகன்’ படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், ‘தக் லைஃப்’ எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர்.
இதில் பேசியிருக்கும் நடிகை த்ரிஷா, “எல்லோருக்குமே இந்த படத்துல நடிக்கணும்னு ஆசை இருக்கும். இந்த மேடையில இருக்குறது எனக்குப் பெருமை. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு அப்புறம் சிம்புகூட எப்போ நடிக்கப் போறோம்னு கேட்டாங்க. இந்த படத்துல அந்த மேஜிக் நடந்திருக்கு. நானும் அபிராமியும் நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்து இப்படத்தில் நடித்திருக்கிறோம்.

‘ஆயுத எழுத்து’, ‘பொன்னியின் செல்வன்’ என மணி சார் இயக்கத்தில ஏற்கனவே நடிச்சிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச நல்ல இயக்குநர் மணி சார். கமல் சார் கூடவும் நடிச்சிருக்கேன். நிறைய லெஜெண்ட்ஸ் கூட நடிக்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அடுத்த மாதம் படம் ரிலீஸாகுது, பாருங்க கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்” என்று பேசியிருக்கிறார்.