
திருவண்ணாமலையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறும்போது, "அரசியலில் தரம் தாழ்ந்து பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார். விஜய் மதுரையில் நடந்த மாநாட்டில் எங்கள் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்றார். அப்படி இருக்கும்போது விஜய் தலைமையில் கூட்டணி அமைக்க பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவுக்கு அதிமுகவை தரம் தாழ்த்தி விட்டார். தன் கட்சித் தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார்.
பாஜகவுக்கு முக்கியமான தேர்தலாக 2024 மக்களவைத் தேர்தல் இருந்தது. அப்போது எதற்காக பழனிசாமி கூட்டணியை விட்டு வெளியே வந்தார். தற்போது மீண்டும் கூட்டணி வைத்துள்ளார். பழனிசாமி நம்பகத்தன்மை அற்றவர். அவருக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. தற்போது விஜய் கூட்டணிக்கு வந்தால் பாஜகவை கூட கழற்றி விட தயாராக இருப்பார். ஆனால், விஜய் வருவாரா என்பது தெரியாது. பழனிசாமியை முதலைமைச்சர் ஆக்குவதற்காக விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறாரா? விஜய்தான் இவருடன் கூட்டணிக்கு வந்து முதலைமைச்சராக பழனிசாமியை தூக்கி பிடிப்பாரா? நடக்காத ஒன்றை பழனிசாமி தொண்டர்களை தக்கவைத்துக் கொள்ள செய்து வருகிறார்" என்றார்.