
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இரண்டாவது முறையாக முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்த இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் மதியழகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனுவில்,
“கரூரில் எங்கள் கட்சியின் கூட்டத்தின்போது காவல்துறையின் அலட்சியம்தான் பலர் இறப்பதற்குக் காரணம். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாலும், விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே என்னுடைய முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது.

ஆனால், தற்போது அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யாரும் மருத்துவ சிகிச்சையில் இல்லை, மேலும் இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்துக்கு முன் ஜாமீன் கிடைக்குமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.