• October 11, 2025
  • NewsEditor
  • 0

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அணிகளுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் அறிமுகக் கூட்டம்  இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் புதிய மாநிலத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அணியின் முக்கியத்துவம், செயல்பாடு, எதிர்காலத்தில் அணி நிர்வாகிகள் செய்யவேண்டிய பணிகள், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சி வந்துவிடும். கூட்டணி குறித்து ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் முடிவு செய்யப்படும். திமுக கூட்டணியில் விசிகவிற்கும், திமுகவுக்கும் விரிசல் உள்ளது.

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடருமா எனத் தெரியவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு வருடங்களில் எதுவும் செய்யவில்லை.

பாஜக நிர்வாகிகள்

அவரது மகனை துணை முதல்வர் ஆக்கியுள்ளார் அவ்வளவுதான். ஆட்சி மாற்றம் வந்தபின் அனைத்துக்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் முதல்வர் தருகிறார். கரூர் கூட்டத்தில் 41 பேர் இறந்ததற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும்” என்று குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா யாரைச் சொல்கிறாரோ அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்ன டிடிவி தினகரன் தற்போது மாற்றி பேசுகிறார் என்றால் நீங்கள் அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் 13ம் தேதி தீர்ப்பு வழங்குவது குறித்து கேட்ட போது, “முதலில் தீர்ப்பு வரட்டும்” என்றார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக அணிகளின் மாநிலத் தலைவர் கே‌.டி ராகவன், விவசாய அணித் தலைவர் ஜிகே நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *