
கோவை மேம்பாலம்:
கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட மேம்பாலமாக பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
ரூ.1,791.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோவை – அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு `ஜி.டி.நாயுடு’ பெயரைச் சூட்டி முதல்வர் ஸ்டாலின் இரண்டு தினங்களுக்கு முன்பு (அக்.9) திறந்து வைத்திருக்கிறார்.
இப்படி கடந்த இரண்டு நாள்களாக அரசியல் அரங்கில் ஒலிக்கப்படும் இந்த ஜி.டி.நாயுடு யார்?
ஜி.டி.நாயுடு
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஜி.டி. நாயுடுவின் முழுப் பெயர் கோபால்சாமி துரைசாமி. 1893-ம் ஆண்டு, கோயம்புத்தூரில் பிறந்த இவருக்குப் புதுமையானவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
அதனால், பள்ளிப்படிப்பில் அவர் மனம் நிலைகொள்ளவில்லை என்பதால் பள்ளிக்கல்வியைப் பாதியிலேயே நிறுத்தினார். 3-ம் வகுப்புவரை மட்டுமே பயின்றார் எனத் தகவல்கள் கிடைக்கின்றன.

தினமும் காலையில் தந்தையுடன் வயலில் வேலை செய்தவர், இரவில் தமிழ் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் தன்னை உருவாக்கியிருக்கிறார்.
முதல் ஆர்வம்:
இவரின் 16-வது வயதில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஜி.டி நாயுடுவின் கிராமத்துக்கு பிரிட்டிஷ் வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் ராஜ்ட் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறார். அவருக்கு அந்த மோட்டார் தொழிற்நுட்பம் மீது ஆர்வம் பிறந்திருக்கிறது.
அதனால், அந்த அதிகாரியுடன் நட்பை வளர்த்துக்கொண்டு அதன் இயக்கம் பற்றிய தகவல்களைக் கேட்டு தெரிந்துகொள்கிறார். இந்த ஆர்வம் அவருக்குள் இயங்கிக்கொண்டே இருந்தது.
பதின்ம வயதில், ஒரு ஹோட்டலில் அவருக்கு வெயிட்டர் வேலை கிடைத்தது. அங்கே வேலையைப் பார்த்துக்கொண்டே மெக்கானிக் வேலையையும் கற்றுக்கொண்டார்.
உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது பணம் சேர்த்து ஒரு மோட்டார் பைக் வாங்கி, அதன் இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்காக முழுவதுமாகப் பிரித்து மாட்டி கற்றுக்கொண்டார்.
அதன் பலனாக, 1920-களில் இந்தியாவின் முதல் உள்நாட்டு காரைத் தயாரித்த ஜி.டி.நாயுடு, தொழில்நுட்பச் சந்தையில் போட்டிபோடும் இந்தியாவின் முதல் அடிக்கு பாதை அமைத்துக்கொடுத்தார்.
சமூக சிந்தனை:
ஜி.டி. நாயுடுவின் புத்தகக் கல்வியைக் கடந்த அவரது அறிவியல் சிந்தனை, புதுமைக்கான தாகத்துடன் தொழில்முனைவோர் மனப்பான்மை, சமூகத்துக்கு உதவும் மனம் ஆகியவை ஒன்றிணைந்தே அவரது கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.
ஒரு பக்கம் கார் தயாரிப்பு என்றால் மற்றொரு பக்கம் இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் விரும்பி உண்ணும் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியதும் அவரே. இதுதான் ஜி.டி.நாயுடு. அவரது கண்டுபிடிப்புகள் எந்த எல்லைக்குள்ளும் அடைக்கப்படவில்லை.
இந்தியா ஒரு விவசாய நாடு. கடந்த நூற்றாண்டில் விவசாயம்தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தது. அதனால் இவரது கண்டுபிடிப்பு கருவிகள் விவசாயிகளின் செயல்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தின.
கண்டுபிடிப்புகளில் சில…
உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி, ஜுசர், நிலக்கடலை உடைக்கும் இயந்திரம், எளிதாகக் கையாளக் கூடிய கரும்பு அரைக்கும் இயந்திரம், ஷேவிங் ரேசர், பிளேடு, சுவர் கடிகாரம், ரேடியோகிராம், தமிழ் டயல் ரேடியோ, கட்டடக் கலவை, எலெக்ட்ரிக் மோட்டார், ஏழைகளுக்கான எளிமையாகக் கட்டக்கூடிய வீடு, ஆட்டோமேடிக் டிக்கெட் மெஷின் எனப் பல துறைகளைச் சேர்ந்த பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.

1930 – 40-களில் ஜெர்மனிதான், தொழில் வளர்ச்சியின் அடையாளமாக இருந்தது. அப்படிப்பட்ட ஜெர்மனியில், ‘Coimbatore, India’ என்று தலைப்பிடப்பட்ட பொருட்களை அணிவகுக்க வைத்தார் ஜிடி நாயுடு.
தொழில் வளர்ச்சி:
இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் போக்குவரத்து சேவையைத் தொடங்கியவரும் ஜி.டி.நாயுடுதான்.
1937-ல், கோயம்புத்தூர் பீளமேட்டில் இந்தியாவின் முதல் மின்சார மோட்டாரையும், பின்னர் ‘யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ்’ (UMS) என்ற போக்குவரத்து நிறுவனத்தையும் தொடங்கினார். 1939-ம் ஆண்டு அவர் நிறுவனத்தில் 300 பேருந்துகள் இருந்தன.
ஜி.டி.நாயுடுவுக்கு கேமிராக்களின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. அப்போது அவர் டிரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் வித்தியாசமான பிலிம் ரோல்களைக் கண்டுபிடித்தார்.
லண்டனில் 1935-ம் ஆண்டு மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இறந்த போது, அவரின் இறுதிச் சடங்குக்கு நேரில் சென்றதுடன், அவரே புகைப்படமும் எடுத்துள்ளார்.
ஜெர்மனி சென்று ஹிட்லரைச் சந்தித்துள்ள இவர், அவரது கேமராவால் ஹிட்லர், காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆளுமைகளையும் படமெடுத்துள்ளார்.
சமூக முன்னேற்றம்:
கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமே ஜி.டி.நாயுடு அல்ல. அவர் ஒரு சிறந்த நன்கொடையாளரும் தொழில்துறை வல்லுநரும் கூட. கோவையின் தொழில்துறையை வடிவமைத்ததில் அவரது பங்கு இன்றியமையாதது.
பல தொழில்களை நிறுவி வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். 1945-ல் ஜி.டி நாயுடு உருவாக்கிய ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் கல்லூரிதான், இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி.
இதன் மூலம் மாணவர்களுக்கு தொழிற்நுட்ப கல்வியோடு, உதவித் தொகையும் வழங்கினார். அவர் உருவாக்கிய ஏழைகளுக்கான வீடுகள், குறைந்த செலவில் 11 மணிநேரத்திலேயே கட்டி முடிக்கப்படக் கூடியவை. எல்லோருக்கும் சொந்த வீடு என்பது அவரது கனவாக இருந்தது.
கோவை நகருக்கு சிறுவாணி தண்ணீர் வழங்கும் திட்டத்தில் தமிழகத்தின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம், ரத்னசபாபதி முதலியார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். அவரது முயற்சிகள் மற்றும் நன்கொடையால் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கின்றன.
அரசியல் தோல்வி:
இந்தியாவிலேயே முதன் முதலில் உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருந்தவர். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே பிரிட்டிஷர் ஒருவரைத் தன் நிறுவனத்தில் பணியாளராக வைத்திருந்தவரும் இவரே.
1936-ம் ஆண்டு மாகாண பொதுத்தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவினார் ஜி.டி.நாயுடு. அந்த ஒரு நிகழ்வைத் தவிர, அவர் அரசியலில் பார்வையாளராகவே இருந்துள்ளார்.
1952-ம் ஆண்டு ரூ.2000 மதிப்பில் இரண்டு இருக்கை கொண்ட பெட்ரோல் எஞ்சின் காரை அறிமுகப்படுத்தி, எஞ்சின் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். ஆனால், அவருக்குத் தேவையான உரிமத்தை அரசு வழங்கவில்லை என்பதால் அது பாதியிலேயே நிறுத்தவேண்டியிருந்தது.
இப்படி தொடர்ந்து நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு, இந்தியாவின் எடிசன் எனப் புகழப்பெற்ற ஜி.டி.நாயுடு 1974-ம் ஆண்டு மறைந்தார்.
தொடரும் ஜி.டி.நாயுடு:
தமிழ்நாட்டின் ஈரோட்டில் உள்ள மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் இளம் ஆராய்ச்சியாளருக்கு ஜி.டி.நாயுடு விருதை வழங்கி கௌரவிக்கிறது.
இயக்குநர் கே.ரஞ்சித் இயக்கிய ‘ஜி.டி நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா’ என்ற ஆவணப்படம் 2019-ம் ஆண்டின் 66-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்படம் என்ற விருதைப் பெற்றது. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி, இயக்குகிறார். ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இப்போதும் ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் கோவையின் ஜி.டி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஜி.டி.நாயுடு கார் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
அதனால், பல்வேறு மோட்டார்களில் இயங்கும் கார்களை வைத்திருந்தார். அவற்றை வைத்து ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால் நாயுடு GEEDEE கார் அருங்காட்சியகத்தை நிறுவியிருக்கிறார். இப்போதும் ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் ஏதோ ஒரு வகையில் இந்தியர்களின் வாழ்வில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.