
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு பொறியியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் பெயரைச் சூட்டுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் அறிவிப்பானை வெளியிட்ட மறுநாளே ஜாதிப் பெயருடன் பாலத்தைத் திறப்பதா? என அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து விமர்சனம் வந்த நிலையில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் விருதுநகரில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் குடியிருப்புகள், நீர்நிலைகள், தெருக்கள், சாலைகள் போன்ற பொது உள்கட்டமைப்புகளில் உள்ள ஜாதி பெயர்களில் மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு வேறு வண்ணம் பூசும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.
அவர் தனது மாலை நேர பிரசங்கத்தில் ஏதாவது கருத்துக்களைத் திரித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இத்துடன் நல்ல திட்டங்களின் உண்மையைத் திரித்துப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அரசியல் நோக்கத்திற்குக் குறுக்குச்சால் ஓட்டுவதை வழக்கமாகச் செய்துவரும் அவர், இந்தத் திட்டம் மூலம் முதல்வருக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார். ஜி.டி நாயடு பாலத்திற்குச் சரியான முறையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜி.டி நாயுடு என்ற பெயரை ஜி.டி பாலம் என்றா பெயர் சூட்ட முடியும்? அதே பகுதியில் வசித்த விஞ்ஞானியான ஜி.டி நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மக்களும் வரவேற்பார்கள். அவர் ஒரு சமூகத்திற்கானவர் மட்டுமானவர் அல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமானவர்.
இதனால் அவரது பெயரை அந்தப் பாலத்திற்குச் சூட்டுவது சாலச் சிறந்தது. அதேபோல் அந்த அரசாணையில் வெளியிட்டு இருக்கக்கூடிய பெயர்கள் ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியெல்லாம் பெயர்கள் இருக்கலாம் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காகச் சில தலைவர்களின் பெயர்களை மட்டுமே நாங்கள் பயன்படுத்தியுள்ளோம் என்று கூற முடியாது. இன்னும் நாட்டுக்காக நமக்காக உழைத்த தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய பெயரையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல் அந்தத் தெருக்களில் அந்தப் பகுதிக்கான மக்களுக்கு உழைத்த தலைவர்கள் இருப்பார்கள். அதனையும் பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என்றுதான் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் வழங்கும் பட்சத்தில் 21 நாட்களில் பரிசீலனைக்குப் பின் பெயர் சூட்டப்படும்.
இதெல்லாம் தெரிந்தும் தி.மு.க-வின் தலைவர்கள் பெயர் மட்டும்தான் இதில் இடம் பெற்று இருக்கிறது எனக் கூறுவது அவர்களின் கற்பனையில் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், இதே நிலையைப் பின்பற்றக்கூடிய வேறு கட்சியின் தலைவர்களும் இந்த அரசாணையின் உண்மை நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.