
கடந்த 9-ம் தேதி, கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
அதற்கு முந்தைய தேதி, தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு என்கிற பெயர் வைத்தது சர்ச்சையாக எழுந்தது.
இந்த விமர்சனங்களுக்கு இன்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்…
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “முன்னேறிய நோக்கோடு, சமுதாய விழிப்புணர்வோடு, சமுதாயத்தில் இருக்கும் இழிநிலைகளைத் துடைத்தெரிய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கோடு முதலமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேறு வண்ணம் பூசுகிறார். இது கண்டிக்கத்தக்கது.
சில அரசியல் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ‘ஏன் இவர்களது பெயரை வைக்கக்கூடாது?’ என்று கேட்கிறார்.
குறிப்பிட்ட இந்தப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்படவில்லை. அதில் எடுத்துக்காட்டு பெயர்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன.
விதிவிலக்கு
தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலத்திற்குப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை வைத்திருப்பதை குறையாகக் கூறுகிறார்கள்.
ஜி.டி. நாயுடு மிகப்பெரிய விஞ்ஞானி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அடையாளமாக இருந்தார். அதனால், அவருடைய பெயரை மேம்பாலத்திற்கு வைப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால்தான், அவருடைய பெயர் மேம்பாலத்திற்கு வைத்துள்ளார்.
ஜி.டி நாயுடுவின் பெயரில் நாயுடு என்று இருப்பதால், வெறும் ‘ஜி.டி’ என்று மேம்பாலத்திற்குப் பெயர் வைக்க முடியுமா? இப்படி அவர் பெயர் வைத்தால் தான், அவர் இன்னார் என்று அறியப்படுவார்.
அவர்கள் எவ்வாறு அறியப்பாட்டார்களோ, அப்படியே பெயர் வைத்தால்தான் அவர்களைக் குறித்து வரக்கூடிய சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். இவற்றை விதிவிலக்காகக் கருத வேண்டும்” என்று பேசியுள்ளார்.