
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ஸ்டாலின் அவர்களே நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்” என்று பேசி கூட்டத்தில் தவெக கொடி அசைவதைப் பார்த்து, “இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க” என்று அதிமுக – தவெக கூட்டணி குறித்த விவாதத்தைத் திட்டமிட்டு பற்ற வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி திண்டுக்கல்லில் பேசியபோது, “பாஜகவிற்கு இபிஎஸ் என்ற அடிமை இருக்கிறார். இப்போது இன்னொரு அடிமையைத் தேடுகிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமியைத் தாக்கியிருந்தார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் பேசியது பற்றி பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி மீது என்ன வெறுப்பு என்று தெரியவில்லை. இருவருக்கும் இடையே நிறைய வெறுப்புகள் . என் மேலேயும் ஏதோ வெறுப்பு இருந்தது, என்னைப் பற்றியும் நிறைய பேசினார் தினகரன். அவர்களுடைய சொந்த பிரச்னைகளுக்காக கட்சிகளைப் பற்றி வெறுப்பாகப் பேசுவது தவறு.
தவெக கூட்டணி பற்றியும், விஜய் எங்கள் கூட்டணிக்கு வருவது பற்றியும் பேசுறாங்க. கூட்டணி குறித்த விஷயங்கள் எல்லாமே ஜனவரி மாதத்திற்குப் பிறகுதான் உறுதியாகத் தெரியும்” என்று பேசியிருக்கிறார் நயினார்.