
நாடு முழுவதும் அடிக்கடி `டிஜிட்டல் கைது’ மூலம் சைபர் கிரிமினல் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.
இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இது போன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பங்கு வர்த்தகம், போரக்ஸ் வர்த்தகம், விசாரணை ஏஜென்சிகளின் போலி சம்மன் போன்ற பல காரணங்களைக் காட்டி இது போன்ற மோசடி செய்யப்பட்டுள்ளது.
அதுவும் சுப்ரீம் கோர்ட், ரிசர்வ் வங்கி பெயரில் போலி சம்மன் அனுப்புவது, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் போன்று பேசுவது என்று இக்குற்றத்தை ஒரு கும்பல் தொழிலாகச் செய்துகொண்டிருந்தது. இது போன்ற மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பல் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.
சூரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி மக்புல் அப்துல் ரஹ்மான், அவரது மகன் காசிப் மக்புல், மகேஷ் மபத்லால், ஓம் ராஜேந்திர பாண்டியா ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது இணையத்தளக் குற்றங்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தைக் கிரிப்டோகரன்சியாக மாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
நான்கு பேரும் சேர்ந்து பல்வேறு இணையத்தளக் குற்றங்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இம்மோசடிக்காக நூற்றுக்கணக்கான வங்கிக்கணக்குகளைத் திறந்து அதில் மோசடி பணத்தைப் பெற்றுள்ளனர். இந்த வங்கிக்கணக்குகளை இயக்க மோசடியாக சிம்கார்டுகளையும் வாங்கியுள்ளனர்.
மோசடி பணத்தை ஹவாலா மூலமும் வெளி இடத்திற்கு அனுப்பியுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கப்பிரிவு பெயரில் போலி சம்மன் அதிக அளவில் நாடு முழுவதும் உலவுவதால் அமலாக்கப்பிரிவு இம்மோசடிக்கு முடிவு கட்ட அனைத்து சம்மன்களிலும் கியூ.ஆர் கோடு ஒன்றை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

அந்த கியூ.ஆர் கோடை பயன்படுத்தி பொதுமக்கள் அந்த சம்மன் உண்மையானதுதானா என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு பணமோசடி சட்டத்தின் கீழ் தாங்கள் யாரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்வது கிடையாது என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இவ்விவகாரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படியும், போலிகளிடம் ஏமாற வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.