
திருச்சி: பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விசிக – தவெக கூட்டணி அமையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: தவெகவுடன் விசிக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுக கூட்டங்களில் தான் தவெக கொடிகளைக் காண முடிகிறது. அப்படியென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக உடன்பட்டுள்ளதா?. தவெக தலைவர் விஜய் பல மேடைகளில், பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கிறது என்றால் பாஜகவை கழற்றிவிட தயாராகிவிட்டது. பாஜகவை கழற்றிவிடும் பட்சத்தில் கூட்டணி அமைப்பதில் அதிமுக நம்பகத்தன்மையற்ற கட்சியாக மாறிவிடாதா?. இவ்வாறு திருமாவளவன் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.