
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் மிளகாய் ரகங்களில் சிவப்பு முண்டு மிளகாய்க்குத் தனி இடம் உண்டு. வறட்சியான பகுதிகளில் செழித்து வளரும் சிவப்பு முண்டு மிளகாய் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.
இதில் காரம், மணம் ஆகியவற்றில் தனித்துவத்துடன் விளங்கும் ‘ராம்நாடு 59 சிவப்பு முண்டு மிளகாய்’க்கு கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சிவப்பு முண்டு மிளகாய்யின் தனித்துவம் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. தமிழக விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் முண்டு மிளகாய் நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் தோட்டக் கலை கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலகம் முழுவதும் இந்த முண்டு மிளகாயின் மதிப்பு சென்றடைந்துள்ளது.

நாட்டின் சிறந்த நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் தபால் தலைகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான பொருட்களுக்கு அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக புவிசார் குறியீடு பெற்ற ராம்நாடு 59 சிவப்பு முண்டு மிளகாயினைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் நடந்த தேசிய அஞ்சல் வார விழாவினை முன்னிட்டு சிவப்பு முண்டு மிளகாய் வடிவம் அச்சிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. முண்டு மிளகாயின் சிறப்பு குறித்து பதிக்கப்பட்ட இந்த அஞ்சல் உறையினை தென் மண்டல அஞ்சல் துறை இயக்குனர் பி.ஆறுமுகம் வெளியிட்டார்.
ராமநாதபுரம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஏ.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் ராமநாதபுரம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் வை. தீர்த்தாரப்பன், தலைமை அஞ்சலக அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.