
கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கடந்த அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்தப் பாலத்துக்கு ஜி.டி. நாயுடு என்று பெயரிடப்பட்டனர். இந்த மேம்பாலம் நேற்று முன் தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்பட்டது.
இதையடுத்து, ‘இது தங்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மேம்பாலம், கோவைக்கு திமுக எதுவுமே செய்யவில்லை’ என்று அதிமுக தரப்பில் குற்றம் சாட்டினார்கள்.
இந்நிலையில் பாலம் திறந்ததையொட்டி அதிமுக சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சுமார் 500 பேர் மேம்பாலத்தின் தொடக்கப் புள்ளியான உப்பிலிபாளையம் பகுதியில் கூடினார்கள்.

மேள தாளம் முழங்க, கலர் ஸ்ப்ரே அடித்தும் அந்த வழியே வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தொடர்ந்து ஏராளமான கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கோல்டுவின்ஸ் பகுதிக்குச் சென்றனர். அங்கும் அவர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
அப்போது வேலுமணி, ‘திமுக மேம்பாலப் பணியைத் தாமப்படுத்தியது. இந்தப் பாலம் காலம் காலமாக எடப்பாடி பழனிசாமியின் பெயரைச் சொல்லும்’ என்று கூறினார்.

இதனிடையே அதிமுகவினர் சாலையை மறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இதனால் காவல்துறையினர் வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.