
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆறு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே முதல்முறையாக உயர்மட்ட அளவில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு ஆப்கனின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது. இதை மேம்படுத்த, காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப அலுவலகத்தை தூதரக அந்தஸ்துக்கு இந்தியா உயர்த்த உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்தார்.