
Doctor Vikatan: என் உறவினருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அவருக்கு உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ரெட் ஒயின் குடித்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என அவருக்கு யாரோ அறிவுறுத்தியதன் பேரில் இப்போது அடிக்கடி ரெட் ஒயின் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். இது உண்மையா, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.
உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க வேண்டும் என்றால் முதலில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகமிக முக்கியம். அடுத்தது இதயத்துக்கு நலம் சேர்க்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். அவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
மீன்கள், நட்ஸ், சீட்ஸ், தேங்காய் எண்ணெய், நார்ச்சத்துக்காக நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை முறைப்படி சேர்த்துக்கொண்டாலே, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் கெட்ட கொழுப்பு உள்ள உணவுகள், பேக்கரி உணவுகள், சர்க்கரை சேர்த்த உணவுகள், ஜூஸ் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
சுகர்ஃப்ரீ உணவுத்தேர்வுக்கு மாறுவது நல்லது. குடிக்கும் பானம், உண்ணும் உணவு என எல்லாவற்றிலும் சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.
தினமும் 30 முதல் 45 நிமிங்கள் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும். அது வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் என எதுவாகவும் இருக்கலாம்.
உடல்பருமன் அதிகரிக்காமல், பி.எம்.ஐ அளவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சில கிலோ எடை குறைவதுகூட உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்களைக் காட்டும்.

புகைப்பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்துங்கள். அந்தப் பழக்கம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை கட்டாயம் குறைத்துவிடும். குடிப்பழக்கமும் அப்படித்தான். ஆறு மாதங்களுக்கொரு முறை உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை டெஸ்ட் செய்து பாருங்கள். அது அதிகரிக்கும்போது இதயநோய் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ரெட் ஒயின் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், ரெட் ஒயினில் பாலிஃபினால் (Polyphenol) எனும் தாவர வேதிப்பொருளின் அளவு கணிசமாக உள்ளது. அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், உங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க ஓரளவு உதவலாம்.
ஆனால், அதை மட்டுமே எடுத்துக்கொண்டால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் அளவுக்கதிகமாக எடுப்பதும் ஆபத்தானது. இது குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து, பிறகு முடிவெடுப்பதுதான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.