
மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய பகுதியான திருவிழந்தூர் மற்றும் கூறைநாடு பகுதிகளை இணைக்க காவிரி ஆற்றின் குறுக்கே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. 1-வது வார்டு மற்றும் 8-வது வார்டை இணைக்கும் இப்பாலமானது உடைந்து ஐந்து வருடங்களாகிறது.
தினமும் பள்ளி செல்லும் மாணாக்கர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடைப்பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த நடைப்பாலம் இன்மையால் பொதுமக்கள் 2 கி.மீ வரை சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு கூடுதல் நேரமும் அலைச்சலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது “இந்த பாலத்தைக் கட்டி 25 வருடம் இருக்கும். இந்த பாலத்தைப் புதிதாகக் கட்டித் தருகிறோம் என்று சொல்லிதான் ஒரு வருடம் முன்னாடி கொஞ்சம் இடிந்த பாலத்தை முழுதாக இடித்தார்களே. ஆனால் கட்டிக் கொடுத்த பாடில்லை. இப்ப பாலத்தை முழுதாக இடித்தது மட்டும்தான் மிச்சம். பாலத்தோடு தூண் மட்டும் நன்றாக இருக்கிறது என்று அதை மட்டும் விட்டுவிட்டார்கள். கொஞ்சம் உடைந்த பாலத்தில் கூட இங்கு உள்ளவர்களெல்லாம் கல்லூரி, பள்ளி, வேலைக்கு எல்லாம் போயிட்டு வந்தார்கள். இப்ப ஒரு வருடமாக அதுவும் போச்சு.”
திருவிழந்தூர், மாப்படுகையில் உள்ளவங்களா கூறைநாடு வரதுன்னாலே இந்த பாலம் இல்லாம ரெண்டு கி.மீ சுத்திதான் வராங்க. இதுவே, இந்த பாலம் இருந்தா நிமிஷத்துல கூறைநாடு போய்டுவாங்க.
கூறைநாடுல கிட்டப்பா ஸ்கூல், ரோட்டரி கிளப் ஸ்கூல், ராஜ் ஸ்கூலுன்னு நெறைய ஸ்கூல் இருக்கு. இந்த ஸ்கூல்ல தான் மாப்படுகை, திருவிழந்தூர் பொட்டவெளி, சாந்து காப்பு தெருல உள்ள நெறைய பசங்க படிக்கிறாங்க.
இந்த பக்கத்துலேந்து மாயரத்துல படிக்கிற பசங்க கூட 2 கி.மீ சுத்தி கூறைநாடு வந்துதான் போவாங்க.
“குடுக்காத மனு இல்ல, ஏறாத ஆபிஸ் இல்ல”
இந்த பாலம் இல்லாததுனால அவசர அவசரன்னு கெளம்புற அவங்கலாம் பாவம் தெனமும் போவ ரெண்டு வர ரெண்டுன்னு நாளு கி.மீ சுத்தோ சுத்தோன்னு சுத்தி போறாங்க.
பாலம் இருந்தபெலாம் போறதும் தெரியாது வரதும் தெரியாது. ஈசியா போயிட்டு வந்தோம். ஆனா இப்ப போயிட்டு வரவே ரொம்ப நேரம் ஆயிடுது. சுத்தி போறது அலைச்சலாவும் இருக்கு.
இந்த பாலத்து வழியா தான் கூறைநாடுல உள்ள ஆஸ்திபத்திரி மாயரத்துல ஆஸ்பத்திரிக்கெலாம் போவோம். இந்த பாலம் இல்லாமா எங்க போவுனுன்னாலும் உடனே போ முல்ல. அத்திர அவசரத்துக்கு போவுன்னா கூட சுத்தி தான் போ வேண்டியதான் இருக்கு.
என்ன பன்றது நாங்களும் குடுக்காத மனு இல்ல ஏறாத ஆபிஸ் இல்ல. பண்ணுன போராட்டத்துக்கும் இங்க பலன் ஒன்னும் இல்லை. சீக்கிரம் பாலத்த கட்டிக்குடுத்துடுங்க.
கட்டிக்குடுதுட்டா நாங்க நிமிஷத்துல கூறைநாடு போயிவிடுவோம். அங்க உள்ளவங்க நிமிஷத்துல திருவிழந்தூர் மாப்படுகைல வந்துடுவாங்க. இந்த பாலத்த நம்பி இருக்குற எல்லாருக்குமே போயிட்டு வர ஈசியா இருக்கும்” என்று கவலையுடன் கூறினர்.
“உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மனு அளித்தோம்”
இதுக்குறித்து 1-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி ரமேஷிடம் பேசியபோது, 1வார்டையும் (திருமஞ்சன வீதி)- 8வது வார்டையும் (தீபாய்ந்தாள் அம்மன் தெரு) இணைக்கின்ற இந்த காவேரி ஆற்று பாலம் மழையால் சேதமடைந்து 2020ல் உடைந்துவிட்டது. இந்த பாலத்த சீரமைக்க 2019-20 இல் Capital Grand Fund (CGF) -க்கு ரூ.18,00,000 மதிப்பீட்டிற்கு நகராட்சி மூலம் டெண்டர் விடபட்டது.
ஆனால், இந்த பாலமானது பொதுபணித்துறையின் கீழ் வருவதால் நகராட்சி மூலம் கட்ட இயலாது. பொதுபணித்துறையால் மட்டுமே கட்ட முடியும் என்பதற்காக பாலம் கட்டும் பணியானது ரத்து செய்யப்பட்டது.
இந்த பாலத்த பார்வையிட்ட அப்போதைய கலெக்டர் மகாபாரதி 07.07.2024 இல் பாலத்த முழுமையாக இடிக்குமாறு புதிதாக கட்ட நிதி ஒதுக்கப்படும் என கூறிய நிலையில் பாலம் முழுமையாக இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பாலம் கட்டபடாமலே உள்ளது. நாங்களும் நாலு வருசமா MLA கிட்ட, நகராட்சி அலுவலகத்துல எல்லாம் எத்தனையோ மனு கொடுத்தோம். போராட்டமும் நடத்தியிருக்கோம் .
ஆனால் இங்க எதுக்குமே பலன் இல்லாம போயிடுச்சி. கொடுத்த மனு எல்லாம் என்னாச்சின்னே தெரியல, எந்த நடவடிக்கையும் எடுத்த பாடும் இல்ல. பாலத்த கட்டுற மாறியும் தெரியல. இந்த பாலத்த கட்டுறதா சொல்லி ராஜ்குமார் எம்.எல்.ஏ, எம்.பி. சுதா, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ் இவங்க எல்லாருமே நேரில வந்து பாத்தாங்க.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மனு அளித்தபோது கூட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமலே உள்ளது. சமீபத்தில் நகர்மன்ற கூட்டத்தினை புறக்கணித்த போது கூட நகர்மன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ் நான் வேண்டுமானால் கட்டுவதற்கு அனுமதி வாங்கி தருகிறேன் உங்களுடைய சொந்த செலவில் கட்டிக்கொள்ளுங்கள் என அலட்சியமாக கூறினார்.
இங்குள்ள அனைத்து பொதுமக்களும் இப்பாலத்தின் வழியாகத்தான் பயணம் செய்து வந்தனர். தற்போது பாலம் இல்லாமல் இரண்டு கி.மீ வரை சுற்றிச் செல்வது அவர்களுக்கு மிகுந்த அலைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே பாலத்தினை அரசு விரைவில் கட்டிக்கொடுக்க வேண்டும்” என்றார்.

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்கிறார்?
இதுகுறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கூறுகையில், “இந்த பாலத்தை முன்னுரிமை அடிப்படையில் கட்ட வேண்டும் எனக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். தமிழக அரசும் மனுவினைப் பார்த்துவிட்டு, மயிலாடுதுறை நகராட்சிக்கு எனது கடிதத்தினை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப ஆணை பிறப்பித்திருந்தது. மேலும் இதர தகவல்களை நீங்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.
நகராட்சி
இதுகுறித்து நகராட்சி இளநிலை உதவியாளர் சுரேஷ் கூறுகையில்,
“பட்டுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழகத்தினர் பாலம் இருந்த இடத்தில் தர ஆய்வு நடத்தினர். பாலத்தின் தூண்களும் இடிக்கப்பட்டு முற்றிலும் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தர ஆய்வு முடிவினை கடந்த ஜூன் மாதம் வழங்கியது.
தற்போது பாலம் கட்டுவதற்கான மதிப்பீடு (Estimate) தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 நாட்களுக்குள் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அரசு ஒப்புதல் வழங்கிய பின் புதிய பாலம் கட்டும் பணியானது தொடங்கும்” என்றார்.
அரசு விரைந்து துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதி மக்களின் வெகுதூர பயணத் தொலைவை குறைத்து எளிமையாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.