• October 11, 2025
  • NewsEditor
  • 0

விசாரணைக்கு அழைத்துச் சென்ற தினேஷ்குமார் என்ற இளைஞர் சந்தேகமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த தினேஷ்குமார்

கடந்த 9 ஆம் தேதி மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்-முத்துலெட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமாரை ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் பிளவர்ஷீலா தலைமையிலான காவலர்கள் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறியபோதும் சடலத்தை மாலை வரை பிணவறைக்கும் கொண்டு செல்லாதது ஏன் என்றும், காவல் ஆய்வாளர் ஃபிளவர்ஷீலா உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு மற்றும் தீண்டாமை வன்கொடுமை வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினேஷ்குமாரின் உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் காவல் நிலையம் அருகே போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா – மரணமடைந்த தினேஷ்குமார்

முறையான விசாரணை நடத்த வேண்டி, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், பி.யூ.சி.எல், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இதனிடையே மானகிரி செல்வக்குமார் என்பவர் இந்த சம்பவம் குறித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ்பாபு அமர்வு “அண்ணா நகர் காவல் நிலைய சிசிடிவி முறையாக செயல்படுகிறதா? இந்த காவல் நிலைய ஆய்வாளர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணை செய்தால் எப்படி நீதி கிடைக்கும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்” என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலாவை ஆயுதப்படைக்கு மாற்றி மதுரை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *