
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை வரும் 16 முதல் 18-ம் தேதிகளில் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதேநேரத்தில், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைக் காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.