
சென்னை: தமிழகத்தில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தாண்டு அக்.2-ம் தேதி பண்டிகை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டம் இன்று (அக்.11) நடைபெறுகிறது. இதில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ஊராட்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரையாற்றுகிறார். அதன்பிறகு கிராமசபைக் கூட்டத்தில் 16 பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இதன்படி தண்ணீர், குப்பை அகற்றம் உள்ளிட்ட முதன்மையான, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய 3 தேவைகள் குறித்து விவாதித்து அவை ஊரக வளர்ச்சித்துறை இணைய தளத்தில் பதிவு செய்யப்படும். அதை மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் ஆய்வு செய்து குறுகிய காலத்துக்குள் குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.