
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ட்ரம்ப்பின் கனவு பழிக்காமல் போனது.
எனினும் நோபல் வெற்றியாளரான மரியா, ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், பரிசை அவருக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார். வெனிசுலா மக்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக ஜனநாயக நாடுகளை நம்பியிருப்பதாகக் கூறியுள்ளார்.
வெனிசுலாவில் துன்பப்படும் மக்களுடன் இருப்பதில் ஆதரவு தருவதற்காக ட்ரம்ப்புக்கு நன்றி கூறினார்.
நார்வேஜியன் நோபல் குழு, வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதில் மரியா கொரினா மச்சாடோவின் தன்னிகரில்லாத போராட்டங்களுக்காக இந்த விருதை வழங்கியுள்ளது. மச்சாடோ வெனிசுலா அரசியலில் சர்வாதிகார அரசுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டி ஜனநாயகத்தின் முகமாகத் திகழ்கிறார்.
கடந்த ஆண்டு வெனிசுலாவில் நடந்த தேர்தலின்போது கடைசி நேரத்தில் மச்சாடோ தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டார். தலைமறைவாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
நோபல் அங்கீகாரம் அனைத்து வெனிசுலா மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்தது என்றும், சுதந்திரத்தை அடையும் தங்களது இலக்கை அடைய இது ஒரு உந்துதல் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்த விருதை வெனிசுலாவின் துன்பப்படும் மக்களுக்கும், எங்கள் நோக்கத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கிய ஜனாதிபதி ட்ரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன்!” என்றும் அவர் கூறியுள்ளார்.
சோசலிசம் – முதலாளித்துவம் : வெனிசுலா அரசியல்!
வெனிசுலாவில் சோசலிச ஆட்சியை எதிர்த்து வன்முறையில்லாமல் போராடிவரும் மரியா கொரினா மச்சாடோ, ட்ரம்ப்பைப் போலவே ஒரு பழமைவாத – வலதுசாரி அரசியல்வாதியாவார்.
இவரும் தனியார்மயத்தை ஆதரிக்கும் சுதந்திர சந்தை, ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்காக குரல் கொடுப்பதனால், சர்வதேச அரசியல் நோக்கர்கள், ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டாலும் அவரது அரசியல் பாதையில் பயணிப்பவருக்கே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தென்னமெரிக்க நாடான வெனிசுலா சோசலிச நாடாக இருப்பதனை அமெரிக்கா அச்சுறுத்தலாகப் பார்த்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்கா – வெனிசுலா இடையே பகைமை வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட், 2025ல் வெனிசுலாவின் கரீபிய கடற்கரையில் அமெரிக்கா 8 போர் கப்பல்களை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக வெனிசுலாவும் தங்கள் படைகளை நிறுத்தியிருக்கிறது. மரியா கொரினா மச்சாடோ வெனிசுலாவில் ஆட்சியைக் கைப்பற்றினால், அமெரிக்க நிறுவனங்கள் பல லட்சம் கோடிகள் முதலீட்டைக் குவிக்கும் என்பதையும் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதை நோக்கிய அடுத்த படியான நோபல் பரிசு ட்ரம்ப்புக்கும் கிடைத்த வெற்றியே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!