
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தின்போதே சென்னை கிளம்பிய விஜய் செப்டம்பர் 30-ம் தேதி எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு வேதனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்த நாள், அக்கட்சியின் தேர்தல் பிரசார நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அதைத் தொடர்ந்து, விஜய் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இவற்றுக்கு நடுவே, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை தொடங்கிய வேளையில், அக்டோபர் 3-ம் தேதி ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இதனை எதிர்த்து த.வெ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி.அன்ஜாரியா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இன்று நடைபெற்றது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லியிலிருந்து இன்றிரவு சென்னை வந்திறங்கினார் ஆதவ் அர்ஜுனா.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “பொதுவாக நம்ம வீட்டுல மிகப்பெரிய இழப்பு ஏற்படும் போது 16 நாள்கள் மிகப்பெரிய துக்க நாள்களாக வலியில் இருப்போம்.
16-ம் நாள் காரியம் முடியும் வரைக்கும் யாரும் பேச முடியாத அளவுக்கு மிகுந்த வலியோடு நாங்கள் இருக்கிறோம்.

நாளை 16-ம் நாள் காரியம். அது முடிந்த பிறகு உண்மைகளை நாங்கள் சொல்வோம்.
கட்சியை முடக்க வேண்டும் என்று நினைக்கும்போது எங்கள் தலைவர் ஒரு சாமானிய மனிதனின் நம்பிக்கையாக நீதித்துறையை நாடியிருக்கிறார்.
உண்மையை வெளிக்கொண்டுவருவதற்காக எங்களுடைய போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.
16-ம் நாள் காரியம் முடிந்ததும் அந்த மக்களை சந்திப்பதற்கான பயணத் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சாமானியர்களாக காத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை வெளியே வரும்” என்று கூறினார்.