
ஆன்லைன் விளையாட்டுகளைச் சட்டம் போட்டுத் தடுத்தாலும் வெவ்வேறு வடிவங்களில் அது வந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு காலத்தில் லாட்டரி சீட்டும், அதிக வட்டி தருவதாகக் கூறி ஆசை காட்டி பணம் திரட்டிய நிதி நிறுவனங்கள் மக்களை அடிமையாக்கி வைத்திருந்தன. அவற்றில் ஏராளமாக பணத்தை இழந்தார்கள். இன்றைக்கும் ‘இரிடியம்’, ஈமு கோழி, மாங்கோ ஃபார்ம், லில்லிபுட் என்று மோசடிக் கூட்டத்திடம் பணத்தை இழப்பதுபோலவே ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட கடன் கொடுக்கும் ஃபைனான்ஸ் மாபியாவிடம் சிக்கி, பல லட்சம் கடன் வாங்கி அதைக் கட்ட முடியாமல் அவர்களிடம் சிக்கி அல்லல்படுபவர்களின் கதை, இன்னும் வெளிவராத உண்மைக் கதையாகவே இருக்கிறது.
அப்படியொரு உண்மையான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு, அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கியிருக்கும் படம் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’. இவர், எடுத்த ‘கூவம்’ என்கிற ஆவணப்படம், ‘சிறந்த நீர்நிலை ஆவணப்பட’த்துக்கான புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் விருதை 2012இல் பெற்றதுள்ளது. விருதை கே.பாலசந்தரிடமிருந்து பெற்றதைப் பெருமையாகக் கூறும் இவர், கே.பாலசந்தரின் மகன் மறைந்த பால கைலாசம் உள்படப் பலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பின் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.