
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன், தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கடந்த ஏழெட்டு மாதங்களாகக் கூறி வந்தார் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்காவின் உதவியுடன் காசாவை நிர்மூலமாக்கிவரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப், கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் வெளிப்படையாக ட்ரம்பை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கவே அவரும் தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்.
ஆனால், நோபல் பரிசு கமிட்டியின் தலைவரான ஃப்ரைட்னஸோ, “இந்தக் குழு எந்த அழுத்தத்திற்கும் அடிப்பணியாது” என்று ட்ரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு தொடக்கத்திலேயே மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்தார்.
இத்தகைய சூழலில், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad) என்பவருக்கு இன்று அறிவிக்கப்பட்டது.
President Trump will continue making peace deals, ending wars, and saving lives.
He has the heart of a humanitarian, and there will never be anyone like him who can move mountains with the sheer force of his will.
The Nobel Committee proved they place politics over peace. https://t.co/dwCEWjE0GE
— Steven Cheung (@StevenCheung47) October 10, 2025
இந்த நிலையில், ட்ரம்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாததற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை எதிர்வினையாற்றியிருக்கிறது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியுங் (Steven Cheung) எக்ஸ் தளத்தில், “அமைதிக்கான ஒப்பந்தங்களை கொண்டுவருவதிலும், போர்களை முடிவுக்கு கொண்டுவருவதிலும், உயிர்களைக் காப்பாற்றுவதிலும் தனது பணிகளை ட்ரம்ப் தொடர்வார்.
அவர் மனிதாபிமான இதயம் கொண்டவர். தனக்கிருக்கும் சக்தியால் மலைகளை நகர்த்தக்கூடிய அவரைப் போல வேறு யாரும் இருக்க முடியாது.
தங்களுக்கு அமைதியை (Peace) விட அரசியல்தான் மேல் என்பதை நோபல் குழு நிரூபித்துவிட்டது” என்று பதிவிட்டிருக்கிறார்.