• October 10, 2025
  • NewsEditor
  • 0

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 3ம் தேதி கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது.

நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து, தவெக சார்பிலும், பாஜக வழக்கறிஞர் குழு சார்பிலும், உயிரிழந்தவர்கள் உறவினர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு வழங்கப்பட்டது. நெரிசல் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

JK Maheshwari, Justice Nilay Vipinchandra Anjaria

தமிழக வெற்றிக் கழகத்தின் மனுவில் விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி.அன்ஜாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது.

தவெக வாதம்

தவெக தரப்பில் இந்த விவகாரத்தில் ‘முன்னதாகவே திட்டமிட்ட சதி நடந்திருப்பதை நிராகரிக்க முடியாது’ என வாதிடப்பட்டுள்ளது.

அத்துடன் உயர் நீதிமன்றம் விசாரணையின்போது, “விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை, சம்பவம் நடந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார், தவெகவினர் யாரும் அங்கு இல்லை” என்றெல்லாம் எதிர் மனுதாரராக இல்லாத விஜய், தவெக பற்றி தேவையில்லாத கருத்துக்களை நீதிபதி தெரிவித்ததாகவும் முறையிடப்பட்டுள்ளது. தங்கள் தரப்பை விசாரிக்காமலேயே உயர் நீதிமன்ற நீதிபதி தங்களை குற்றம்சாட்டியதாகக் கூறியுள்ளனர்.

தவெக சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

உயர் நீதிமன்றத்துக்கு கேள்வி!

கரூரில் நடந்த நெரிசல் சம்பவம் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்கு வரும் நிலையில், சென்னையில் உள்ள முதன்மை நீதிமன்றம் எப்படி வழக்கை விசாரித்தது? எனக் கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சென்னை உயர் நீதிமன்றம் மனுவின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்காமல் அதன்போக்கில் சென்றுள்ளதாகவும் விமர்சித்துள்ளது.

சிபிஐ விசாரணை கோரும் பாதிக்கப்பட்ட மக்கள்

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நெரிசல் ஏற்பட்டதில் காவல்துறையின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

தனது மகனை இழந்துள்ள பன்னீர்செல்வம் பிச்சைமுத்து என்பவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேஷாதிரி நாயுடு, இந்த விவகாரத்தில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் முடக்கப்படுவதாக வாதாடினார். முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம், உயர் நீதிமன்றத்தின் சிறப்பு புலனாய்வுக் குழு என விசாரணை சிதறடிக்கப்படுவதாகவும், ஒரு மைய விசாரணை அமைப்பை அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Karur Tragedy

மற்றொரு மனுதாரரான தனது தங்கை மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இழந்ததாகக் கூறப்படும் எஸ்.பிரபாகரன் என்பவர் சார்பில், போலீஸ் காரணமில்லாமல் லத்தி சார்ஜ் செய்ததாகவும், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட, நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ்கள் கூட்டத்துக்குள் வந்ததாகவும், சமூக விரோத கும்பல் கூட்டத்தில் பொருட்களை வீசி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் வாதிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜரானார். அவர், “உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது.

அதே வேளையில் இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நியமித்தது.

அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக இருக்கிறார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம்.

Karur

கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும்.

இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான்” என வாதிட்டுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் வில்சன், “விதிவிலக்கான சூழலில் மட்டுமே சிபிஐ வழக்கை விசாரிக்கும்” என வாதிட்டுள்ளார். மேலும் விஜய் பரப்புரைக்கு தாமதமாக வந்ததே மரணங்களுக்கு காரணம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடப்பட்டுள்ளது.

3, 4 மணிநேரத்தில் பிரேத பரிசோதனை?

மேலும், “நெரிசல் நடந்த மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு காவல்துறையோ அல்லது வேறு அரசியல்வாதிகளோ காரணம் என சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதைக் கேட்ட நீதிபதி, “3,4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தீர்களா? அங்கே எத்தனை டேபிள்கள் இருந்தன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு விளக்கமளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், அப்போது மருத்துவ மாநாட்டுக்கு வந்திருந்த 220 மருத்துவர்களும் 160 செவிலியர்களும் கரூரில் இருந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐக்கு வழக்கை மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளது. விசாரணையை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி மகேஸ்வரி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *