
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது என்றும், தங்கள் நாட்டில் இருந்து கொண்டு எந்த ஒரு குழுவும் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் செயல்பட தங்கள் அரசு அனுமதிக்காது என்றும் இந்தியா வந்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.
2021ல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடியது. அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து, வர்த்தகம், மருத்துவ உதவி, மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதற்காக இந்தியா தொழில்நுட்ப அலுவலகத்தைத் திறந்தது.