
புதுடெல்லி: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை." என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதிடப்பட்டது.
கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார்.