• October 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து அக்டோபர் 07 அன்று ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது.

அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த திருமாவளவன், “எனது வண்டிக்கு முன்னால் இருசக்கர வண்டியில் ஒரு இளைஞர் போய்க்கொண்டிருந்தார்.”

திருமாவளவன்

அவர் நம்முடைய வண்டியை நன்றாக கவனித்துவிட்டு, அந்த வண்டியில் நான் அமர்ந்திருக்கிறேன் என்பதைப் பார்த்து, வேண்டுமென்றே வம்பு இழுக்கிற மனநிலையில் வேகமாகப் பேசியிருக்கிறார்.

அந்தத் தம்பி எந்த நோக்கத்திலே வந்து பிரச்னை செய்தாலும் பரவாயில்லை, அதை விட்டுவிடுங்கள். பிரச்னையைப் பெரிதாக்க வேண்டாம். அவர் எந்த நோக்கத்தில் செய்தாலும், அது அவருக்கு உரியது.

அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். அவர் வண்டி நம்முடைய வண்டியின் மீது மோதவில்லை, அப்படி விபத்து என்று சொல்லத்தக்க வகையில் எதுவும் நடக்கவில்லை.

ஆனால் சிலர் விபத்து என்கிறார்கள், சிலர் அவருடைய வண்டியில் நம்முடைய கார் மோதியது என்றார்கள். எல்லாம் அப்பட்டமான, தவறான தகவல்கள். எல்லாவற்றிலும் திரிபு வாதம்தான்.

பொய் செய்திகளைப் பரப்புவது, அவதூறுகளைப் பரப்புவது, வதந்திகளைப் பரப்புவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, சமூகப் பதற்றங்களை உருவாக்குவது… இதுதான் அவர்களின் அரசியல். அப்படித்தான் இதிலும் நடந்திருக்கிறது.” எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவரின் எக்ஸ் பக்கத்தில், “உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி’ என்பது தெரியவருகிறது.”

திருமாவளவன்
திருமாவளவன்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபடத் தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.

பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக ஐயமற விசாரித்திட வேண்டுமெனக் கோருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *