• October 10, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட்டில் `டைகர் 3′ உள்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் வரீந்தர் சிங் குமான். இவர் 6.2 அடி உயரம் உடையவர். பஞ்சாப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

பாடிபில்டரான வரீந்தர் சிங் ஆணழகன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசித்து வந்தார்.

வரீந்தர் சிங்

சொந்தமாக ஜிம் நடத்தி வந்த வரீந்தர் சிங்கிற்கு நேற்று மாலை திடீரென தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அங்கு அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். ஆனாலும் அவர் அகால மரணமடைந்தார்.

வெறும் 41 வயதாகும் வரீந்தர் சிங் 2009ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா என்ற ஆணழகன் பட்டத்தை வென்றார். ஆசிய ஆணழகன் போட்டியில் இரண்டாவது இடத்தில் வந்தார்.

2027ஆம் ஆண்டு பஞ்சாப்பில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த வரீந்தர் சிங் மரணத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வரீந்தர் சிங்
வரீந்தர் சிங்

இது குறித்து மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு வெளியிட்டுள்ள செய்தியில்,

“வரீந்தர் சிங் பஞ்சாப்பிற்கு பெருமை சேர்த்தவர். அவரது மரணம் நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

பஞ்சாப் தனது பெருமையை இழந்துள்ளது. அவர் தனது கடின உழைப்பு மற்றும் சைவ வாழ்க்கை முறையால் உடற்தகுதி உலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார். அவரது வாழ்க்கை எப்போதும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவும் வரீந்தர் மறைவுக்கு அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *