• October 10, 2025
  • NewsEditor
  • 0

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தார்.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டிருப்பதால் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாள் இரவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாலத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மிக நீளமான பாலம் என்பதால், அதில் பயணித்து போட்டோ எடுப்பதற்காக நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை ஏராளமான இளைஞர்கள் மேம்பாலத்திற்கு படையெடுத்தனர். அதில் பலரும் கட்டுப்பாடின்றி வேகமாக வாகனங்களை இயக்கினார்கள். மேம்பாலத்தின் ஏறு, இறங்கு தளங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ஃபி எடுக்க தொடங்கினார்கள்.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

ஏறு, இறங்கு தளங்கள் குறித்த அறிவிப்புப் பலகை வைக்கவில்லை. இதனால எந்தப் பக்கம் ஏற வேண்டும், எந்தப் பக்கம் இறங்க வேண்டும் என்று தெரியாமல் மக்கள் குழம்பினார்கள். இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உப்பிலிபாளையம் பகுதியில் பெரிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அது பழைய மேம்பாலம், புதிய மேம்பாலம் ஆகியவ்ற்றை இணைக்கும் பகுதியாக உள்ளது. ரவுண்டானா மிகவும் பெரிதாக இருப்பதால் அங்கிருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மேம்பாலம் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், “மக்கள் பாலத்தை பார்வையிட அதிகளவு வந்த காரணத்தால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அதில் பெரும்பாலான வாகனங்களில் ஆங்காங்கே யூடர்ன் எடுத்ததும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். ஒருவாரம் ஆய்வு செய்துவிட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *