
அலுமினிய பாத்திரங்கள் இல்லாத இந்திய சமையலறையே இல்லை என்று கூறக்கூடிய அளவிற்கு அலுமினிய குக்கர்களும், வாணலிகளும் நமது அன்றாட வாழ்வில் பங்களித்து வருகின்றன.
குறைவான எடை, மலிவான விலை என அலுமினியப் பொருட்களை வாங்க வரிசையாக காரணங்களை அடுக்கலாம். ஆனால், அலுமினிய பாத்திரங்கள் வாங்கும்போதும், பயன்படுத்தும்போதும் கவனம் மிக முக்கியம்.
மும்பையைச் சேர்ந்த ஐம்பது வயது நபர் ஒருவர், சமீபத்தில் மறதி, சோர்வு, காலில் வலி மற்றும் உணர்வின்மை போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில், அவரது ரத்தத்தில் ஒரு டெசிலிட்டருக்கு 22 மைக்ரோகிராம் அளவு லெட் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவர் விசாரித்ததில்,
அவரின் மனைவி இந்தியத் தர நிர்ணயப் பணியகத்தின் (Bureau of Indian Standards – BIS) அங்கீகாரமில்லாத அலுமினிய குக்கர் ஒன்றை இருபது வருடங்களாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம், அலுமினியப் பயன்பாட்டாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்தலாமா? அப்படிப் பயன்படுத்தினால் எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நீரிழிவு நோய் நிபுணர் பவித்ரா தமிழரசன் விளக்குகிறார்.

“அலுமினிய பாத்திரங்களில் சமைப்பதில் ஆபத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முடிந்தவரை அலுமினிய பாத்திரங்களைத் தவிர்த்துவிட்டு இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகங்களுக்கு மாறிவிடுவது நல்லது.
பழைய அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது தேய்மானம், உணவில் இருக்கும் அமிலம் ஆகிய காரணங்களால் அலுமினிய துகள்கள் உணவில் கலக்கின்றன.
அது உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் அதிக அளவு அலுமினியம் கலக்கும்போது, எலும்பு, சிறுநீரகம், மூளை போன்ற பாகங்களை பாதிக்கிறது.
மேலும், மறதி, குழப்பம், பேசுவதில் சிக்கல், வலிப்பு, நரம்பியல் நோய்கள், ரத்தசோகை, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, கோமா என்று உயிரிழப்புவரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
லெட் அளவு ரத்தத்தில் அதிகமானால், இந்த பாதிப்புகள் கூடவே மலட்டுத்தன்மையும் ஏற்படும். பொதுவாக அலுமினிய குக்கரில் லெட் இருக்காது. அது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.
BIS சான்றிதழ் பெறாத அலுமினிய குக்கர்களில் லெட் கலப்படம் செய்யப்பட வாய்ப்புள்ளது. லெட் போன்ற மிகவும் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் சமையல் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது மிகவும் அபாயம் வாய்ந்தது.
முறையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படாத அலுமினிய குக்கர்களில் உள்ள அலுமினியம் மறுசுழற்சி செய்யப்பட்டவை. அவற்றில் லெட் போன்ற உலோகக் கலப்படங்கள் இருக்க வாய்ப்பு அதிகம்.
முறையான தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதே இதற்கான சரியான தீர்வாக இருக்கும்” என்றவர், அதுவரை நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள பின்பற்றவேண்டிய வழிமுறைகளையும் சொன்னார்.
· BIS முத்திரையுள்ள அலுமினிய சமையல் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
· பாத்திரத்தில் தேய்மானம், கீறல்கள் தென்பட்டால் உடனே அதனை மாற்றிவிட வேண்டும்.
· அலுமினிய பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது எலுமிச்சை பயன்படுத்தி அழுத்தி தேய்த்து கழுவுவதை தவிர்க்க வேண்டும்.
· குளிர்சாதனப்பெட்டியில் அலுமினிய பாத்திரங்களில் உணவுகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
· அலுமினியம் ஃபாயில் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும்.
· இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்றவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.