• October 9, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

 நீண்ட நெடிய மூச்சுடன் அந்த சிறிய ஸ்டேஷனில் வந்து நின்ற அந்த ரயிலிலிருந்து உதிர்ந்த ஒரு சிலரோடு தானும் இறங்கினான் சண்முகம்.

ஒல்லியாக, ஒட்டிய வயிறுடன் பஞ்சத்தில் அடிபட்டவன் போலத் தோற்றம். ஒருவாரமாக மழிக்கப் படாதிருந்த தாடி. அவன் முதுகில் படர்ந்திருந்த  பேக் பேக்கும்..கண்களில் மாட்டியிருக்கும் தடித்த கண்ணாடியும்தான்  ஓரளவுக்காவது  மற்றவர்கள் அவனை மதித்துப் பார்க்கும் வகையில் இருந்தது.

பிளாட்பாரத்தில் கால் வைத்ததும் அவனுள் ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம். சொந்த மண்ணின் பந்தமா? அல்லது ஆயாவைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷமா..?

விவரம் தெரியாத வயதில் செத்துப் போய்விட்ட தாயும் தகப்பனும் ஆயாவிடம் இருந்த ட்ரங்க் பெட்டியில் புகைப்படமாக இருக்க,
இவனையும் இவன் தங்கை மலரையும் வளர்த்தது ஆயாதான்.

சொந்தமாக வீடில்லை, வாசலில்லை..! அந்த ஊரிலிருந்த ஒற்றைப் பேருந்து நிறுத்ததை ஒட்டிய இடம்தான் இவர்கள் வசிப்பிடம்.

அங்குதான் இட்லிக் கடை நடத்தி இவர்கள் இருவரையும் ஆளாக்கினாள் ஆயா!

மலர் பத்தாவது முடித்ததும் சாமிகண்ணுவிற்கு
பேசி முடித்துவிட்டாள் ஆயா. பக்கத்து ஊர்.. தூரத்து சொந்தம் என்பதோடு பையன் ஒழுக்கமானவன், கட்டினவளை நன்றாக வைத்துக் கொள்வான்
என்று நம்பி கட்டிவைத்தாள். அந்த நம்பிக்கை இதுநாள்வரை பொய்யாய் போகவில்லை. ஆயாவிடம் வளர்ந்ததை விட மலர் இப்போது சொகுசாயும் சந்தோசமாயும்தான் இருக்கிறாள் பிள்ளை குட்டிகளோடு.

சாமிகண்ணுவும் ஆயா மீது வைத்திருந்த பாசத்தையும் மரியாதையையும் இன்னும் அப்படியே வைத்திருக்கிறான் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி ஆயாவுக்கு!

 சண்முகம்,படிக்கும் காலத்தில் பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என ஒன்று விடாமல் அத்தனையிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றது ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் சண்முகத்தை  அடையாளப் படுத்தியது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகத்துக்கு திரைக்கதை அமைத்து வசனமெல்லாம் எழுதிக் கொடுக்க அதில் கிடைத்த  கைத்தட்டலும், பாராட்டும் சேர பள்ளியில் பிரபலம் ஆனான் சண்முகம்.

அதற்குப் பிறகு இன்டர் ஸ்கூல் காம்பெடிஷன்
எங்கு நடந்தாலும் கலந்து கொள்ளும் சண்முகம் வெற்றிக் கோப்பையோடுதான் திரும்புவான்.

சண்முகத்தின் திறமையால் ஈரக்கப்பட்ட அறிவியல் ஆசிரியர் வடிவேல், அவனின் திறமை இந்த ஊரோடு நின்றுவிடக்கூடாது  என்று சினிமா துறை படிப்புக்கு உதவி செய்து அவனை ஊக்குவிக்க,

இதெல்லாம்தான் அவனை சினிமா கனவு காண வைத்து, சென்னையை நோக்கி உந்தித் தள்ளியது.

ஏதோ ஒரு வேகத்தில் கனவுகளோடு புறப்பட்டு வந்து, பணப் பற்றாக்குறைக்கு பலரிடம் கையேந்தி,  படிப்பை நல்லவிதமாக முடித்து விட்டாலும் அவ்வளவு எளிதாகவெல்லாம் வேலையோ.. சினிமா வாய்ப்புகளோ கிடைத்துவிடவில்லை
சண்முகத்துக்கு!

போராடித் தோற்று… போராடித் தோற்று…
என்று போராட்டமும் தோல்வியுமாகவே வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில், எந்த ஜென்மத்து புண்ணியமோ ஒரு குறும்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதுதான் இப்போது மிகப்பெரிய ஆறுதல் அவனுக்கு!

அதுவரை வறண்டு கிடந்த மனதில்  கொஞ்சமே கொஞ்சமாக மகிழ்ச்சியும் நம்பிக்கையும் எட்டிப் பார்க்கவாரம்பித்தது!

தங்கை மலரோடு சேர்த்து அவனுக்கென இருக்கும் உறவும் ஆதரவும் ஆயாதான்.
குறும்பட வாய்ப்பு கிடைத்ததைச் சொல்லி இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவு வந்துவிட்டதென்று ஆயாவிடம் சொன்னால் எத்தனை சந்தோஷப்படுவாள்?

ஆயாவின் புன்னகை சிந்தும் சுருக்கம் நிறைந்த முகம் கண்முன் நிழலாடியது.
ஆயா நெற்றியில் பூசியிருக்கும் விபூதிக்கும், அவள் அணிந்திருக்கும்  ரவிக்கைக்கும் எப்போதும் போட்டிதான். யார் அதிக வெள்ளை என்பதில்..!
கலர் சேலைக் கிழிசலைக் கூட வெளியே தெரிந்துவிடாதவாறு மடிப்புக்குள் மறைத்துக் கட்டிக் கொண்டிருப்பாள் ஆயா.

சென்னையே கதி என்று சென்றுவிட்ட கடந்த பத்து வருட காலத்தில் அவன் தனது ஊருக்கு இரண்டு முறை மட்டுமே வந்துபோன ஞாபகம். இப்போது வந்திருப்பது மூன்றாவது முறை..

தங்கை மலருக்கு குழந்தை பிறந்த நேரத்தில், பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் தாய் மாமன்தான் சக்கரைத் தண்ணி வைக்கவேண்டும் என்று ஆயாவும், மலரும் ஆசைப்பட்டு அழைத்ததால் ஆறு வருடங்களுக்கு முன் வந்திருந்தான்.

“வெறுங்கையோட போகாத.. தங்கச்சி மகனுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போ என்று ஆயா கையில் வைத்து
அழுத்திய இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களோடு போய் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தான்.

அப்புறம், ஊரில் திருவிழா எடுக்கிறார்கள் என்று ஆயா வற்புறுத்தி வர வைத்திருந்தாள்.

பண்டிகைக்கு  தங்கையையும், சாமிக்கன்ணுவையும் குடும்பத்தோடு அழைத்து செய்யுமளவு செலவுக்குக் கூட இவனிடம்  பணமில்லை.

அப்போதும் ஆயாதான் எல்லா செலவுகளையும் ஏற்று செய்தாள்.
திருவிழாவுக்கு வரி கொடுப்பதிலிருந்து துணிமணி, விருந்து, பூஜை சாமான், கோழி அறுப்புக்கு என்று எல்லாவற்றையும் குறைவில்லாமல் செய்து மலர் குடும்பத்தையும், இவனையும் வழியனுப்பி வைத்தாள் ஆயா!

ஆயாவே எல்லா செலவையும் செய்கிறாளே என்ற இயலாமை உறுத்த,
“ஆயா, இதுல கொஞ்சம் பணமிருக்கு. வெச்சிக்க..!” என்று இவன் தந்த போதும் வாங்க மறுத்துவிட்டாள் ஆயா!

சென்னையில் வாய்ப்பு தேடி அலைவதற்கு நடுவே வயிற்றுப் பாட்டை கவனிக்க வேண்டி சின்னச் சின்ன வேலைகள் செய்து சம்பாதித்ததில் இவன் தேவைக்குப் போக மீதியிருந்ததைத்தான் கொடுக்கப் போனான்.

“டவுன்ல இருக்குற உனக்குதான் செலவு ஜாஸ்தி சாமி.
எனக்குத் தந்துட்டு நீ பட்னி கிடப்பியா?” பேரனின் அன்பைப் புரிந்துகொண்டவள் அவனிருக்கும் நிலமையை யோசித்து,  தன் கையிலிருந்ததையும் சேர்த்து இவனிடம் கொடுத்தாள்.

சண்முகம் எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை ஆயா.

“ஒண்டி ஆளு நான்.என்னத்த செலவளிக்க போறேன்?  இந்த வவுத்துக்கு வஞ்சனை  இருக்கக்கூடாதுன்னுதான் இந்த இட்லிக் கடையவே ஓட்டறேன்.
ஏதோ என்னால நாலு ஏழை பாழை வயிறு நிரம்புது இந்த ஊர்ல. எனக்கு இது போதுமய்யா..! நீயும் உன் தங்கச்சியும் நல்லா இருந்தா அதுவே போதும் சாமி!ஆண்டவன் கிட்ட நான் வேண்டிக்கறதும் அதைத்தான்..!”

ஆயாவின் நினைவுகளில் லயித்தபடியே நடந்திருந்தவன்,
சாவு மேளச் சத்தம் கேட்க நிகழுலகத்துக்கு திரும்பினான்.

“இந்த குக்கிராமத்தில் இவ்வளவு பெரிய வீடா?” ஆச்சரியத்துடன் பார்த்தவன் கண்களில் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கண்ணில் பட்டது.

ஆளைப் பார்த்த ஞாபகம் இருந்தாலும்,
சொந்த ஊருக்கு வருவதே அரிதானதால்
அடையாளம் காண முடியாமல் நடையை நிதானப் படுத்தினான்.
எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு கொண்டுவர இயலவில்லை அவனால்!

அதற்குள் அந்த வீட்டின் வாசலை நெருங்கியிருந்தான்.
வாசலுக்கு நேரே ஃப்ரீசர் பாக்சில் வைக்கப் பட்டிருந்தது சடலம். ஒற்றைப் பூமாலை அதன் மீது. பக்கத்தில் நான்கைந்து மாலைகள் வாடிக் கிடந்தன!

அதிக கூட்டமில்லை.
அடித்துக் கொண்டு அழவும் யாருமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் அமர்ந்திருந்தனர்.

“கனடாவுல இருக்குற மகன் வந்துட்டு இருக்கானாம்..!” அங்கிருந்த யாரோ ஒருவர் சொல்ல,

“அவன் எப்ப வந்து எப்ப காரியத்தை முடிச்சிட்டு நாம ஊர் போய் சேர்றது? சேதி கேட்டதும் வீட்ல எல்லாம் போட்டது போட்டபடின்னு விட்டுட்டு வந்தோம். பள்ளிக்கூடம் போயிருந்த பிள்ளைங்க கிட்டகூட சொல்லிக்காம வந்துட்டோம்..!” மற்றவர் அலுத்துக் கொள்ள,

“அடடா! இந்த காலத்துல  புள்ளைங்களை தனியா விட்டுட்டு வர்றதுக்கும் பயமால்ல இருக்கு? யார்ட்டயாவது சொல்லிட்டு வந்திருக்கலாம்ல..?”

“கொஞ்சம் வளர்ந்த பசங்கதான்! பக்கத்து ஊர்ல இருக்குற எங்க மாமியார் வீட்ல போய் இருந்துக்க சொல்லியிருக்கு..!” என்று சொன்னவர்,

“வாங்க பக்கத்துல டீக்கடை இருந்தா டீ குடிச்சிட்டு வரலாம்..” வெளியே வந்த அவர்களிருவரும் பேசியபடியே இவனைக் கடந்து செல்ல,

இதெல்லாம் சண்முகம் காதில் விழுந்தாலும், இவர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் யோசனை மாத்திரமே மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்தது.

“ஏங்க, இவர் மகன் யாருங்க..? அவர் பேர் என்ன சொன்னீங்க..?”
நடந்துகொண்டிருந்தவர்களை சமீபித்து கேட்டிருந்தான் சண்முகம்!

“எதுக்கு கேக்கறீங்க தம்பி?”

“இல்லை, நானும் இந்த ஊர்க்காரன்தான். ஆனா ஊரை விட்டுப் போய் பல வருஷம் ஆச்சு. தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்ங்க..”

“ஓ! அப்படியா? அவரு மகன் பேரு சண்முகம் தம்பி!”

பேரைக் கேட்டதும் சண்முகத்தின் மனதுக்குள் இன்னதென்று விவரிக்க முடியாத உணர்வுத் தாக்கம் ஏற்பட்டிருந்தது.

“வி. சண்முகம்..”

“உள்ளேன் ஐயா..!” கோரஸாக ஒலித்தது இரண்டு மாணவர்களின் குரல்கள்.

எரிச்சலுடன் அட்டனென்சை கீழே வைத்த வகுப்பாசிரியர்,

“தோ பாருங்கடா.. நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. தினமும் உங்ககிட்ட என்னால லோல் பட முடியாது. ஒன்னு, யாரோ ஒருத்தர் பேரை மாத்தித் தொலைங்க..இல்லாட்டி வேற செக்ஸனுக்காவது போய்த் தொலைங்க..!”

“சார்! ரெண்டு பேரோட அப்பாங்க பேரும், இவிங்க பேரும் ஒண்ணா இருக்குறதுக்கு இவிங்க என்ன செய்வாங்க சார்?”
இவர்களுக்கு வக்காலத்து வாங்க வகுப்பில் எழுந்து பேசியவனை ‘பிரகஸ்பதி’ என்ற பட்டத்துடன் ஆசிரியர் திட்டவும் வாயை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டான்.

“இப்ப என்ன பண்ணலாம்..? நீங்களே சொல்லுங்கடா..!” ஆசிரியரின் கடுகடுத்த முகத்தைக் கண்டு பேச பயந்தார்கள்.

“டேய், இங்க வாங்கடா!”

“எஸ் சார்!” கை கட்டி வாய் பொத்தி ஆசிரியர் முன்பு பணிவுடன் நின்றார்கள் இருவரும்.

“உங்கப்பா என்ன பண்றார்டா?” கேள்வி இன்னொரு சண்முகத்திடம் போக,

“எங்கப்பா பெரிய பணக்காரர் சார். சொந்தமா வீடு தோட்டமெல்லாம் நெறைய இருக்குது..!”

“இப்ப நீ சொல்றா..? உங்கப்பா என்ன பண்றார்?”

சண்முகம் வாயைத் திறப்பதற்கு முன்பே
“சார்! அவனுக்கு அப்பா அம்மா யாரும் இல்லை சார்! அவனுக்கு வூடுகூட இல்லை. பஸ் ஸ்டாப்லதான் தங்கி இருக்காங்க..! அவன் ஆயா இட்லி சுட்டு வியாபாரம் பண்ணுது!”
கடகடவென ஒப்பித்திருந்தான் முதலாவது சண்முகமே.

“அப்படியா சேதி..? அப்போ உன்னை கேர் ஆஃப் பிளாட்பாரம்னு போட்டுக்கறேன். இனிமேல் குழப்பம் வராது!” ஆசிரியர் சொல்லி முடித்ததும் ஒருசில மாணவர்கள்
சிரிக்க, அவமானத்தில் கூனிக் குறுகி,  வெடிக்கவிருந்த
அழுகையை பல்லைக் கடித்து கட்டுப்படுத்தினான் சண்முகம்.

நடந்ததை நினைக்கும் இந்த நேரத்திலும் கண்களில் கண்ணீர் திரையிடப் பார்த்தது.
சண்முகத்தின் முக பாவம் மாறுவதைக் கண்ட இருவரும்,

“ஏன் தம்பி, செத்துப் போனவர நினைச்சி அழறீங்களா? விடுங்க..
வயசாயிட்டது. சாகற வயசுதான்..!”

அதற்குள் டீக்கடையை சமீபித்திருந்தார்கள்.
அவர்களிடம் விடைபெற்று பள்ளிப் பருவத்தில் தான் அவமானப்பட்டதை அசைபோட்டுக் கொண்டே ஆயாவைக் காண நடந்தான் சண்முகம்.

இரண்டு வீதி தாண்டி,
அந்த தெருவில் நுழைந்த போதே கூட்டம் தென்பட்டது. சாவு மேளச் சத்தத்துடன் கும்பலாக குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒரு பக்கமும், ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருக்கும் பெண்கள் கூட்டமும் கண்ணில் பட, “அட இங்கேயும் ஒரு இறப்பா?” யாரோ என்றுதான் நினைத்திருந்தான் அந்த இடத்தை நெருங்கும் வரை!

ஆனால், அங்கு கூடியிருந்த கூட்டம் சண்முகத்தைப் பார்த்ததும் அழுகையை அதிகப்படுத்த,
படபடத்த மார்பை கையில் வைத்து அழுத்தியபடி நடையை எட்டிப் போட்டான்.

அழுதழுது சோர்ந்து போயிருந்தான்  சாமிகண்ணு. சண்முகத்தைப் பார்த்த பார்வையில் வறண்டிருந்த கண்ணில் கண்ணீர் மீண்டும் ஊற்றெடுக்க சண்முகத்தை கட்டிக்கொண்டான்.

“அண்ணே! ஆயா நம்மளை எல்லாம் உட்டுட்டு போயிடுச்சி அண்ணே…!”  இன்னொரு பக்கம் பெருங்குரலெடுத்து மலர் வெடித்து அழத் தொடங்கிவிட, அதுவரை அழுது ஓய்ந்திருந்த கூட்டம் மீண்டும் அழுகையை தொடர்ந்தது.

இட்லிகடை நடத்திவந்த அந்த பிளாட்பாரத்தில் நெற்றி விபூதியுடன் கிடத்தப் பட்டிருந்தாள் ஆயா! ஏகப்பட்ட பூமாலைகள் அவள் மீது போர்வையாக கிடக்க, தலைமாட்டில்  வைக்கப் பட்டிருந்த குத்துவிளக்கும் ஊதுபத்தியும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

ஊரே திரண்டு வந்துவிட்டது போலத் தோன்றியது ஆயாவின் சாவுக்கு!

“சம்முவம்..வந்துட்டியா ஐயா..! ஆயா உசுரோட இருக்குறப்ப ஒரெட்டு வந்து பாக்கத் தோணலியே உனக்கு?
என்னிக்காவது ஒருநாள் என் பேரன் சினிமா படம் எடுப்பான். நாலு காசு சேர்த்து ஆயாவுக்கு சொந்தமா  வூடு கட்டித் தருவான்னு சொல்லிட்டே இருந்திச்சே ஆயா! சாகுற வரைக்கும் அது வெச்சிருந்த ஆசை நிறைவேறாம இந்த பிளாட்பாரத்துலயே உசுர விட்டுடுச்சே  சாமி…!”  சொன்னவர் துக்கம் தாளாமல் அழுகையைத் தொடர,

“ஆயா…! என்னை ஏமாத்திட்டு போயிட்டியே ஆயா..!”
தலையில் அடித்துக்கொண்டு பெருங்குரலெடுத்து
ஆயாவின் முன் மண்டியிட்டு குலுங்கிக் குலுங்கி அழும் சண்முகத்தை தேற்ற முடியாது  திகைத்து நின்றது கூட்டம்!

சரியாக ஒரு வருடம் கழித்து, சண்முகம் இயக்கிய  “பிளாட்பாரம்” குறும்படம் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட பட்டியலில் ஒன்றாக இடம் பிடித்திருந்தது.

இந்திராணி நாகசுப்ரமணியம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *