
மடப்புரம் அஜித்குமாரைப் போல மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறை சித்ரவதையால் கொலை செயப்பட்டுள்ளார் என்று உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் மதுரையில் போராட்டம் நடத்தி வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன்-முத்துலெட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் (வயது 30 ) ஐடிஐ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஒரு வழக்கில் விசாரிக்க வேண்டுமென்று இன்று அதிகாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த மதுரை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் பிளவர் ஷீலா தலைமையிலான தனிப்படை காவலர்கள் காமு, நாகராஜ் ஆகியோர் தினேஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் தினேஷ்குமாருடன் அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகியோரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து காலை 9 மணிக்கு தினேஷ்குமாரின் தந்தை வேல்முருகன் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு தினேஷ்குமார் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தவர், தன் வழக்கறிஞருடன் தினேஷ்குமாரை காவல்துறையினர் எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்துள்ளார்.

பின்னர் வண்டியூர் பகுதியிலுள்ள கால்வாயில் சடலம் கிடப்பதாக தகவல் வந்து தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டதில் அது தினேஷ்குமாரின் உடல் என்று தெரியவந்துள்ளது.
மதியம் தினேஷ்குமாரின் தந்தையை வருமாறு அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துள்ளனர். அப்போது, ‘தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை மதுரை வண்டியூர் அருகேயுள்ள புறக்காவல் நிலையத்தில் வைத்து அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவிட்டு அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக வாகனத்தில் ஏற்றியபோது தினேஷ்குமார் காவல் துறையினரிடமிருந்து தப்பியோட முயன்று வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி இறந்ததாகவும், பின்னர் அவரது சடலத்தை தீயணைப்புத் துறையினர் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்’ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ்குமாரின் பெற்றோர் அண்ணாநகர் காவல்துறையினர் தங்களது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பின்னர் இந்த தகவல் வெளியே பரவி தினேஷ்குமாரின் உறவினர்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ‘தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது, நீதி விசாரணை நடத்த வேண்டும், தினேஷ்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ எனக் கூறி அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘மதியம் 1 மணிக்கு மீட்கப்பட்டதாக சொல்லப்பட்ட தினேஷ்குமாரின் சடலம் மாலை 5 மணி வரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்படாதது ஏன்?’ என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.