• October 9, 2025
  • NewsEditor
  • 0

ஒருநாள் உலகக் கோப்பை (2023), டி20 உலகக் கோப்பை (2024), சாம்பியன்ஸ் டிராபி (2025) என ஒயிட் பால் கிரிக்கெட்டில் கடைசியாக நடைபெற்ற 3 ஐ.சி.சி தொடர்களிலும் கேப்டனாக முன்னின்று இந்திய அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றவர் ரோஹித் சர்மா.

அவற்றில், 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியா வென்றது.

இதில் சுவாரஸ்யமாக, 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியிலும், தற்போது டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்த ஒரே வீரர் ரோஹித் சர்மாதான்.

கோலி, ரோஹித், கில்

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் (2024-ல் சர்வதேச டி20-யிலிருந்து ஓய்வு) திடீரென ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, 2027-ல் இந்தியாவுக்காக ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே தனது இலக்கு எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறிருக்க, அக்டோபர் பாதியில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடர் (3 ODI & 5 T20) தொடங்கவிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு ரோஹித்தும், கோலியும் ஆடப்போகும் சர்வதேச தொடர் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ரோஹித்திடமிருந்த கேப்டன் பதவியைப் (ODI) பறித்து சுப்மன் கில் தலைமையிலான அணியை அறிவித்தார் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கார்.

அதோடு, ரோஹித், கோலி ஆகியோர் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்பதற்கும், “அது தொலைவில் இருக்கிறது. இப்போதே பேச வேண்டாம்” என்று புறக்கணித்துவிட்டார் அஜித் அகர்கார்.

இந்த நிலையில், தனக்கு கேப்டன்சி அளிக்கப்பட்டது குறித்தும் ரோஹித் சர்மா குறித்தும் கில் பேசியிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான நடப்பு டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி நாளை தொடங்குவதை முன்னிட்டு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேப்டன் கில், “இது (கேப்டன்சி) டெஸ்ட் போட்டிக்கு நடுவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சற்று முன்பாகவே எனக்கு அது தெரியும்.

இது மிகப்பெரிய பொறுப்பு. இந்த ஃபார்மெட்டில் எனது நாட்டை வழிநடத்த ஆவலுடன் இருக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று உண்மையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அதேசமயம், நிகழ்காலத்தில் நான் இருக்க விரும்புகிறேன். இதற்குமுன் என்னால் என்ன சாதிக்க முடிந்தது, அணியாக என்ன சாதிக்க முடிந்தது என்பதைத் திரும்பிப் பார்க்க நான் விரும்பவில்லை.

அடுத்தடுத்த மாதங்களில் நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் அனைத்தையும் வெல்ல விரும்புகிறேன்” என்று கூறினார்.

ரோஹித் சர்மா - சுப்மன் கில்
ரோஹித் சர்மா – சுப்மன் கில்

தொடர்ந்து ரோஹித் குறித்து பேசிய கில், “ரோஹித்திடமிருந்து நிறைய குணங்களை நான் பெற்றிருக்கிறேன்.

அவரின் அமைதி மற்றும் குழுவில் அவர் காட்டும் நட்பு ஆகியவற்றை நான் விரும்புகிறேன். அவரிடமிருந்து நான் பெற விரும்பும் குணங்கள் இவை” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *