
சென்னை: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி 38 ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்துள்ளதாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.