
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் தன் மீது நடந்த காலணி தாக்குதல் முயற்சி சம்பவத்தைக் கண்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அறையில் நடந்த விவாதத்தின்போது இந்த விவகாரம் குறித்துப் பேசிய பி.ஆர்.கவாய், “திங்கள்கிழமை நடந்த சம்பவத்தால் நானும், எனது கற்றறிந்த சகோதரரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களைப் பொறுத்தவரை இது மறக்க வேண்டிய ஒரு விஷயம்” என்று தெரிவித்துள்ளார். அப்போது அருகில் இருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான், “இந்த விவகாரத்தில் எனக்கு சொந்த கருத்து உள்ளது. அவர் இந்தியாவின் தலைமை நீதிபதி. இது நகைச்சுவைக்கான விஷயம் அல்ல. இது அமைப்புக்கு (உச்ச நீதிமன்றத்துக்கு) ஏற்பட்ட அவமானம்” என தெரிவித்தார்.