
தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மானியத்துடன் கூடிய அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.
பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “ஸ்டார்ட்-அப் வளர்ச்சி குறித்த விவாதங்கள், பெரும்பாலும் பில்லியன் டாலர் மதிப்பீடுகள், பெரிய அளவிலான முதலீடுகள் என்பதை மையமாக கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்த வாய்ப்புகள், எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று திட்டமிடுகிறோம்.

குறிப்பாக, பின்தங்கிய நிலையில், விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில், அதற்கு முன்னால் இருந்ததை விட, ஆறு மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் தளத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஸ்டார்ப் அப் ஊக்கப்படுத்துவதற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும். தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களில், முதலீடு செய்யும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும். அடுத்த மாதம் கோவையில் மிகப் பெரிய பூங்காவாக 175 கோடி ரூபாய் செலவில், செம்மொழிப் பூங்கா திறக்க இருக்கிறோம்.

அதற்கடுத்து, கோவையில், மிகப் பெரிய நூலகமாக பெரியார் உலகம் விரைவில் திறக்க இருக்கிறோம். அதேபோல, கோவையில், மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமும் வர இருக்கிறது.” என்றார்.