
‘எடப்பாடி சூசகம்!’
நாமக்கல்லின் குமாரப்பாளையத்தில் அதிமுகவின் பிரசாரக் கூட்டத்தின் போது கூட்டத்தில் தவெக கொடியை பிடித்திருந்தவர்களை பார்த்து, ‘கொடி பறக்குதா…அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும். பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க. இந்த ஆராவாரம் உங்க செவியை கிழிக்குதா ஸ்டாலின்..’ என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. எடப்பாடியின் பேச்சு அரசியல் களத்தில் அதிமுகவும் தவெகவும் நெருங்கி வருகிறார்களா எனும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
‘விமர்சிக்காத விஜய்!’
கட்சி தொடங்கியதிலிருந்தே விஜய் அதிமுகவை மட்டும் விமர்சிக்காமல் தவிர்த்தே வந்தார். திமுகவையும் பாஜகவையும் மட்டுமே தன்னுடைய எதிரியாக அறிவித்தார். விஜய் தங்களை விமர்சிக்காததால் அதிமுக முகாமும் அமைதி காத்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் விஜய்யை புகழ்ந்து பேசி வந்தனர். திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், அதில் முன்னேற்றம் இல்லாததாலயே எடப்பாடி டெல்லிக்கு சென்று பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தியதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
விஜய் தரப்பில் இரண்டு விதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டது. அதாவது, திமுகவுக்கு எதிர்க்கட்சி நாங்கள்தான் என்பதை பொசிஷன் செய்வதற்காக மட்டுமே விஜய் திமுகவை பிரதானமாக தாக்கி அதிமுக பக்கம் பார்வையை திருப்பாமல் இருந்தார் எனக் கூறப்பட்டது. அதேநேரத்தில், கூட்டணி தொடர்பான முடிவுகள் எதையும் டிசம்பருக்கு பிறகுதான் எடுக்க வேண்டும் என்கிற மனநிலையிலும் தவெக முகாம் இருந்தது.

‘அதிமுக – பாஜக கூட்டணி!’
இதற்கிடையில்தான் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது. பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்திருப்பதால் இனி அதிமுகவுடன் கூட்டணி செல்ல முடியாது என்கிற மனநிலைக்கு விஜய் தரப்பு வந்து சேர்ந்தது. இதைத் தொடர்ந்துதான் விஜய்யின் வியூகப்புள்ளி விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசார திட்டங்களை வடிவமைத்தார்.
‘விஜய் தரப்பின் வியூகம்!’
‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்கிற கருத்தாக்கத்தோடு எம்.ஜி.ஆர், அண்ணா படங்களையும் சேர்த்துக் கொண்டுதான் மதுரை மாநாட்டையும் நடத்தியிருந்தார்கள். அதற்கு பிறகான சுற்றுப்பயணமும் அதே தீமில்தான் நடக்க தொடங்கியிருந்தது. மதுரை மாநாட்டில்தான் விஜய் முதல்முறையாக அதிமுகவை தாக்கிப் பேசியிருந்தார். ‘எப்படி இருந்த கட்சி இப்போ எப்படி ஆகிருச்சு பாருங்க. அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு யார் பக்கம் வரணும்னு தெரியும்.’ என இரத்தத்தின் இரத்தங்களுக்கு தூண்டிலும் வீசியிருந்தார்.

சுற்றுப்பயணத்திலுமே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என எங்கேயுமே விஜய் அதிமுக பற்றி பேசாமலிருந்தார். அது விமர்சனமாகவே கரூர் சம்பவத்துக்கு முன்பாக பேசிய நாமக்கல்லில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்து பேசியிருந்தார். இடையில் விஜய் எம்.ஜி.ஆரையும் அண்ணாவையும் கையிலெடுத்து தங்களையும் தாக்கியதால் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி போன்ற முன்னாள் அமைச்சர்கள் விஜய்யை விமர்சிக்க ஆரம்பித்தனர்.
‘கரூர் நெரிசலுக்குப் பிறகு!’
இந்நிலையில்தான் கரூர் நெரிசல் சம்பவம் நடந்திருந்தது. அன்றிரவிலிருந்து காட்சிகள் மாற ஆரம்பத்தன. மறுநாள் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த எடப்பாடி, விஜய் மீது எந்த விமர்சனத்தையும் வைக்காமல் முழுக்க முழுக்க அரசையும் காவல்துறையையும் மட்டுமே தாக்கிப் பேசியிருந்தார்.
அதிமுக, பாஜக என இரண்டு கட்சியினருமே விஜய்க்கு ஆதரவாக நின்றனர். எடப்பாடி தன்னுடைய பிரசாரங்களில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து எடப்பாடியின் பிரசாரங்களில் தவெக கொடியுடன் சிலர் கூட்டத்தில் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியானது. விஜய்யும் தன்னுடைய வீடியோவில் எடப்பாடியின் பெயரை குறிப்பிடாமல் தனக்கு ஆதரவளித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் நேற்று விஜய் அதிமுகவை கடைசியாக விமர்சித்து பேசிய அதே நாமக்கலில் எடப்பாடியும் பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்திலிருந்த தவெக கொடிகளை பார்த்து, ‘கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது.’ என்றும் உற்சாகமாக பேசியிருந்தார். நேற்று காலைதான் விஜய்யும் எடப்பாடியும் கூட்டணி குறித்து தனியாக தொலைபேசியில் பேசிக்கொண்டதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு இரண்டு தரப்பிலிருந்துமே மறுப்பு வெளியாகவில்லை.
இதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம், ‘கரூர் சம்பவத்துக்கு பிறகு கட்சி இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. முதலில் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி யோசிப்போம்.

கூட்டணி விவகாரத்தில் டிசம்பருக்கு பிறகுதான் முடிவெடுக்க வேண்டும் என்பதில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.’ என்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.