திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் ஸ்ரீகாந்த் – மணமகள் பிரியதர்ஷினி ஆகியோர் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பின் திருமண நிகழ்ச்சி மேடையில் பேசும்போது, “இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். வீராசாமி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நேற்று மாலையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிக்கு எங்கு சென்றாலும் எழுச்சி வரவேற்பு உள்ளது.
இந்த திருமண விழா அரங்கிற்கு வாகனத்தில் இருந்து வரும்போது கூட எழுச்சியையும், அன்பையும் பார்த்துவிட்டுதான் வந்தேன்.
முழுதாக மேடைக்கு வந்து செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்னுடைய கைகளுடன் இந்த நிகழ்ச்சி மேடைக்கு நான் வருவேனா என்ற சந்தேகம் இருந்தது.
கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன்.
பாஜகவுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி என்ற அடிமை சிக்கி உள்ளார். இன்று அந்த அடிமை பத்தவில்லை என்று புது அடிமை கிடைக்குமா? என பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
புது அடிமை நிச்சயமாக கிடைப்பார்கள். ஆனால், எத்தனை அடிமைகள் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் கடைசி திமுக தொண்டர் இருக்கும்வரை பாஜக தமிழ்நாட்டில் காலடி வைக்க முடியாது.
எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை மறந்துவிட்டார்!
எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை மறந்துவிட்டார். நீலகிரி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு மாலை அணிவித்த பின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததாக கூறுகிறார்.
கீழே இருக்கும் தொண்டன் கூறுகிறான் அது எம்ஜிஆர் சிலை என்று. எடப்பாடிக்கு அமித் ஷா முகம் மட்டுமே நினைவில் இருக்கிறது.
இந்த திருமண மணமக்களுக்கு மட்டுமல்லாமல் முதல்வர் எங்கு சென்றாலும் கூறுவது உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்கவும் என்பதே” என பேசினார்