
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆர்ஜேடி – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு (CEC) தேர்வு செய்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பிஹாரில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகத்பந்தனுக்கு தலைமை வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 55 முதல் 60 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.