• October 9, 2025
  • NewsEditor
  • 0

நாட்டின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மும்பையில் ஏற்கனவே இருக்கும் ஒரு விமான நிலையம் பயணிகள் நெருக்கடியால் விழிபிதுங்கியபடி இருக்கிறது. இதையடுத்து விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மும்பைக்கு இரண்டாவது விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மும்பை அருகில் உள்ள நவிமும்பை பன்வெல் பகுதியில் கடலோரம் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு மலைக்குன்று உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

அதில் கிடைத்த பாறை மற்றும் மண் போன்றவை கடல் சதுப்பு நிலப்பகுதியில் போட்டு நிலம் கையகப்படுத்த பயன்படுத்தப்பட்டது. அதோடு அந்த வழியாக ஓடிய ஒரு ஆற்றை வழிமறித்து வேறு வழியாக திருப்பி இருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த 10 கிராமங்களை சேர்ந்த 3,500 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாற்று இடத்தில் அரசு வீடு கட்டிக்கொடுத்து குடியமர்த்தி இருக்கிறது. பொதுமக்களின் போராட்டம் காரணமாக விமான நிலையம் கட்டுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று நவிமும்பை விமான நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த விமான நிலையம் நாட்டிலேயே மிகப்பெரிய பசுமை விமான நிலையமாக ரூ.19,650 கோடி செலவில் முற்றிலும் டிஜிட்டல் மயமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் சோலார் மின்சார வசதி செய்யப்பட்டு இருப்பதோடு கடல் மார்க்கமாகவும், சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் இந்த விமான நிலையத்தை சென்றடையும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

டெர்மினஸ் கட்டடம் தாமரை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. அதன் தூண்கள் இலைவடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3,700 மீட்டர் ஓடுதளத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் வருடத்திற்கு 2 கோடி பயணிகளை கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் இரண்டு ஓடு தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் போது 4 டெர்மினஸ் கட்டிடங்கள் ஒரே நேரத்தில் செயல்படும்.

தென்மும்பையில் இருந்து 37 கிலோமீட்டர் தூரத்தில் 1160 ஹெக்டேர் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை எதிர்காலத்தில் வருடத்திற்கு 6 கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்க திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதானி நிறுவனமும், மாநில அரசுக்கு சொந்தமான சிட்கோ நிறுவனமும் இணைந்து இதனை கட்டி முடித்து இருக்கிறது. இந்த விமான நிலைய திறப்பு விழா உட்பட மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்தார். புதிய விமான நிலையத்தில் நடந்த விழாவில் விமான நிலையத்தை திறந்து வைத்து இதர திட்டங்களையும் தொடங்கி வைத்து பேசினார்.

இவ்விழாவில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே, தொழிலதிபர் கெளதம் அதானி, மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்தை திறந்து வைப்பதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பிரதமர் நரேந்திர மோடி நடந்து சென்று பார்வையிட்டார். அதோடு பிரதமரை வரவேற்க வந்திருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுடனும் கலந்துரையாடினார்.

மேலும் மும்பையில் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மூன்றாவது மெட்ரோ வழித்தடத்தின் இரண்டாம் மற்றும் இறுதி கட்டபோக்குவரத்தையும், மும்பையில் மக்கள் மெட்ரோ, பஸ், ரயில் என அனைத்திற்கும் பயன்படுத்தும் வகையில் மும்பை ஒன் என்ற போக்குவரத்து செயலியையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புதிய விமான நிலையம் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் இப்போது திறக்கப்பட்டாலும் பயணிகள் விமான சேவை டிசம்பர் மாதத்தில் இருந்துதான் தொடங்க இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *