• October 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் நாகு என்கிற நாகேந்திரன். இவர் சிறுவயது முதலே பாக்ஸராக வேண்டும் என்ற கனவோடு வலம்வந்தவர். அதனால் வடசென்னையிலுள்ள பாக்ஸிங் கோச்சிங்கில் சேர்ந்தார். அங்கே விஜி என்ற பாக்ஸருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. பாக்ஸர் விஜியும், வடசென்னையில் 1990-களில் கோலோச்சிய பிரபல ரௌடி வெள்ளை ரவியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் விஜி மூலம் நாகேந்திரனுக்கு வெள்ளை ரவியின் அறிமுகம் கிடைக்க… அவரது வாழ்க்கை தடம்மாறத் தொடங்கியது. வெள்ளை ரவி, விஜி, நாகேந்திரன் மூவரையும் ‘மும்மூர்த்திகள்’ என்று அழைக்கும் அளவுக்குக் கொலை, கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சிகளில் கூட்டாக ஈடுபடத் தொடங்கினார்கள்.

எதிரியை ஒரே குத்தில் நாகேந்திரன் நிலைகுலைய வைத்துவிடுவார் என்பதால், வெள்ளை ரவியின் ரௌடி டீமில் முக்கியத் தளபதியாக மாறினார் நாகேந்திரன். 1990-ல் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், முதல் தடவையாக வியாசர்பாடி போலீஸாரால் நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றார். அதன் பிறகு 1991-ல் நாகேந்திரன்மீது கொலை வழக்கு பதிவானது. இப்படி நாகேந்திரன்மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி அவர் பிரபல தாதாவானார்.

ஆம்ஸ்ட்ராங்

வடசென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாகேந்தினுக்கு 1997-ல் நடந்த வியாசர்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கு தலைவலியாக மாறியது. இந்த வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் சிறைக்குள் இருந்தபடியே தன்னுடைய கூட்டாளிகள் மூலம் வடசென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நாகேந்திரன். இவர்மீது ஐந்து கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் இருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

இந்தச் சூழலில்தான் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறையிலிருந்தபடி தன்னுடைய மகன் அசுவத்தாமன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக நாகேந்திரன் மீதும் அசுவத்தாமன் மீதும் செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் நாகேந்திரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் சிறைப்பறவையாக இருந்த நாகேந்திரனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்தது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நாகேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு நிகழ்வுகளை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *