• October 9, 2025
  • NewsEditor
  • 0

கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கினாலும் இன்னமும் இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒரு நல்ல முடிவை எட்டவில்லை.

தற்போது இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி அமலில் உள்ளது.

இதனால், இந்தியா – அமெரிக்கா உறவில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 21 அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் (Lawmakers) கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த 21 பேரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ட்ரம்ப் – பரஸ்பர வரி

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

“அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயலால் அமெரிக்காவின் விரோத நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இந்தியா தனது பொருளாதார மற்றும் ராஜாங்க உறவை அதிகப்படுத்தி உள்ளது.

இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித வரி இந்திய உற்பத்தியாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது.

இது இன்னொரு பக்கம், அமெரிக்கா வாடிக்கையாளர்களுக்கு விலையை உயர்த்துகிறது. மேலும், அமெரிக்க சந்தைக்குள் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அமெரிக்க நிறுவனங்களின் விநியோக சங்கிலியையும் பாதிக்கிறது.

இந்திய உறவு மிக முக்கியமானது

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவு என்பது மிக மிக முக்கியமானது. இரு நாடுகளிலுமே இதை நம்பி ஆயிரக்கணக்கானோரின் வேலை இருக்கிறது.

செமிகண்டக்டர், மருத்துவம், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவின் மிக முக்கியமான மூலப்பொருள்களை நம்பி அமெரிக்க உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர்.

இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் உலகிலேயே மிக வேகமாக வளரும் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இருக்கின்றன.

அமெரிக்கா
அமெரிக்கா

பாதிக்கும் அமெரிக்க குடும்பங்கள்

அமெரிக்காவில் பில்லியன் டாலர்கள் கணக்கில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதன் மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

இப்போது விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் இந்த உறவைப் பாதிக்கின்றன. விலைவாசி உயர்வு மூலம் பல அமெரிக்க குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும், உலக அளவில் அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிடுவதையும் பாதிக்கிறது. இதனால், இந்தப் பிரச்னையை விரைவில் சரிசெய்ய வேண்டும்” என்று கடிதத்தில் எழுதியுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *