
மும்பை: நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த விமான நிலையம் அதானி குழுமத்தால் பொது தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாதிரியின்கீழ் கட்டப் பட்டுள்ளது. இங்கு வரும் டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான சேவை தொடங்க உள்ளது.
விமான நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: மும்பையில் பயணம் மற்றும் இணைப்பை மாற்றி அமைப்பதில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் முக்கிய பங்காற்றும். மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் இணைப்பதன் மூலம் இந்த விமான நிலையம் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தும். இது, ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக உருவெடுக்கும்.