
சென்னையில் 2017-ல் போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது.
நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை.
டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை” ஆகியவை தஷ்வந்த்தை விடுவிப்பதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், “குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அன்புமணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு காமிரா காட்சிகள் போதுமானவை அல்ல, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள். தாயைக் கொலை செய்த வழக்கிலும் பிறழ்சாட்சியத்தைப் பயன்படுத்தி தஷ்வந்த் விடுதலையான நிலையில், இப்போது இந்த வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார்.
இந்த வழக்கில் தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் சிறுமியைக் கொலை செய்தது யார்? என்ற வினா எழுகிறது. இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை.
3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது. அப்போதிலிருந்தே இந்த வழக்கு தடம் மாறத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும். டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால்தான் தண்டிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
குழந்தைகள்தான் வாழும் தெய்வங்கள். அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனித மிருகத்துக்குக் கூட தண்டனை பெற்றுத்தர முடியவில்லை என்றால் நமது சட்ட செயலாக்க அமைப்பும், வழக்கு நடத்துவதற்கான கட்டமைப்பும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதற்காக அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற கொடிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியிருந்தார்.