
சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குநர்கள் பங்கேற்றனர். இதில், புகை மருந்து தெளிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகைகளையும், தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டையும் அமைச்சர்கள் வெளியிட்டனர்.