• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது.

தமிழகத்தை உலுக்கிய கொடூரம்!

இந்த வழக்கின் பின்னணியைப் பொறுத்தவரையில், 2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.

சம்பவம் நடந்த இரண்டே நாளில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், அடுத்த மாதமே ஜாமீனில் வெளிவந்தார்.

தஷ்வந்த்

தாயைக் கொன்ற தஷ்வந்த்!

அதையடுத்து, பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் டிசம்பரில் செலவுக்குப் பணம் தரவில்லை என தாயை அடித்துக் கொன்றுவிட்டு மும்பைக்கு தப்பியோடினார்.

பின்னர், மும்பைக்கு விரைந்த தமிழக தனிப்படை போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தஷ்வந்த்தை கைதுசெய்து சென்னை கொண்டுவந்தனர்.

தனது வாக்குமூலத்தில் தாயைக் கொலைசெய்ததை தஷ்வந்த் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்பட்டது.

தூக்கு தண்டனை + 46 ஆண்டுகள் சிறை!

மறுபக்கம், சிறுமி வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த்தை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தூக்கு தண்டனையும், 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றமோ செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

அடுத்தபடியாக தஷ்வந்த் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நிறுத்தி வைக்கப்பட்ட தூக்கு தண்டனையும், பிறழ் சாட்சியான தந்தையும்!

தூக்கு தண்டனை என்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதில் உரிய விளக்கமளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன் தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தஷ்வந்த்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, தஷ்வந்த் தனது தாயைக் கொலை செய்த வழக்கில் முக்கியமான சாட்சியான அவரின் தந்தை பிறழ் சாட்சியாக மாறினார்.

இதனால், செங்கல்பட்டு நீதிமன்றம் இந்தாண்டு ஏப்ரலில் போதிய ஆதாரங்கள் இல்லை என தஷ்வந்த்தை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

ஆதாரமில்லை… DNA ஒத்துப்போகவில்லை… விடுதலை!

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான தஷ்வந்த்தின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று, அவர் மீதான தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது.

நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை.

சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை. டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை.

எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்கிறோம். மேலும், இவ்வழக்கிலிருந்து தஷ்வந்த்தை விடுவிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறை

விடையின்றி நிற்கும் கேள்விகள்… காவல்துறை பதில் என்ன?

முதலில் தாயைக் கொலைசெய்த வழக்கில் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் ஆதாரங்கள் இல்லையென 5 மாதங்களுக்கு முன்பு தஷ்வந்த் விடுதலையானார். எனில், அவரின் தாயைக் கொலைசெய்தது யார்?

இப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் உறுதியான ஆதாரங்கள் இல்லை, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என உச்ச நீதிமன்றமே தஷ்வந்த்தை விடுவித்திருக்கிறது.

அப்படியென்றால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது யார்?

கீழமை நீதிமன்றத்தில் என்ன மாதிரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காவல்துறையின் பதில் என்ன?

மகளை இழந்த பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு தமிழக காவல்துறை என்ன செய்யப்போகிறது? விடையின்றியே நிற்கிறது இந்த கேள்விகள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *