
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வை அறிவிக்க தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் காரணம் எனக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான தொடரில் விளையாடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வினும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு அடுத்தபடியாக ரோ-கோ இணை களமிறங்கும் சர்வதேச போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில்தான். கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன் ரோஹித்திடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கௌதம் கம்பீரால் இந்திய அணி மோசமான கலாச்சாரத்தை நோக்கி செல்வதாக மனோஹ் திவாரி கூறியுள்ளார். விராட் அல்லது ரோஹித் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதுகுறித்து மனோஜ் திவாரி கூறுவதாவது, “அஸ்வின், ரோஹித், கோலி போன்ற வீரர்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடியிருக்கிறனர். இவர்கள் தலைமை பயிற்சியாளர் அல்லது மற்ற ஊழியர்களை விட மிகவும் உறுதியானவர்கள், அவர்கள் கூறுவது உவர்ப்பாக இல்லாவிட்டால் இந்த வீரர்கள் கேள்வி எழுப்புவார்கள். எனவே அடிப்படையில் இந்த வீரர்கள் அணியில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.
இந்த பயிற்சியாளர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுவதை நான் பார்க்கிறேன். இங்கு நடக்கும் பல விஷயங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. அவர் பதவியேற்ற பிறகு அஸ்வின் ஓய்வை அறிவித்தார். ரோஹித்தும் கோலியும் தொடர்ந்து அதையே செய்தனர்.

இன்னும் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. சில எதிர்பாராத நபர்கள் அணிக்குள் வருகின்றனர். நேராக பிளேயிங் 11ல் வாய்ப்பைப் பெறுகின்றனர். கம்பீர் நிலையாக விளையாடாத (கன்சிஸ்டன்டாக இல்லாத) நேரத்தை நாம் பார்த்திருக்கிறோம்.” எனப் பேசியுள்ளார்.
ரோஹித் மற்றும் கோலியை ஒருநாள் அணியிலிருந்து கம்பீர் நீக்கமாட்டார் எனப் பேசிய திவாரி, “உருவாக்கப்பட்டுள்ள சூழ்நிலையும், சூழலும் இந்த வீர்ரகள் மீது அதிகப்படியான அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது, ரோஹித்தும் கோலியும் இந்திய கிரிக்கெட்டின் முதன்மையான சேவகர்களாக இருந்துள்ளனர். அவர்கள் இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றனர். விளையாட்டில் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் வைத்துள்ள இந்த வீரர்கள், அதற்காக அனைத்தையும் விட்டுக்கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இந்த வீரர்களின் இமேஜ் பாதிக்கப்படும் என்றாலோ, இனியும் தாங்கள் ட்ரெஸ்ஸிங் அறையில் தேவையில்லை என்று உணர்ந்தாலோ அவர்கள் ஓய்வு குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் அவர்கள் விளையாட விரும்புகிறார்கள் என்றே நான் நம்புகிறேன். இவர்கள் இல்லாமல் விளையாடுவது குறித்து கம்பீர் சிந்திக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் வெள்ளைப் பந்து விளையாட்டில் இவர்கள் மிகச் சிறப்பானவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவர்களை உலகக்கோப்பையில் விளையாட வைக்கவில்லை என்றால் அது மிகவும் மோசமான முடிவாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.
2027 உலகக்கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது பற்றிய உங்கள் கருத்துக்களைக் கமண்டில் தெரிவியுங்கள்!