• October 8, 2025
  • NewsEditor
  • 0

‘கரூர் துயரம்!’

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை உறுதிப்படுத்திக் கொள்ள கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை தொடர்புகொண்டு பேசினோம்.

karur Tragedy

‘வீடியோ காலில் ஆறுதல் கூறிய விஜய்!’

சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தின் அருகேயே இருக்கிறது ஒன்றரை வயது குழந்தையான துருவ் விக்னேஷின் வீடு. கூட்டநெரிசலில் அந்த ஒன்றரை வயது குழந்தையும் உயிரிழந்திருந்தது. அந்த குடும்பத்தினரை விஜய் வீடியோ காலில் தொடர்புகொண்டிருக்கிறார்.

‘கண்ணீர் விட்ட விஜய்!’

‘என்ன சொல்றதுன்னே தெரியலம்மா. ஈடு செய்ய முடியாது இழப்பு இது. என்னைக்குமே உங்க கூட நிப்பேன்.’ என விஜய் உருக்கமாக பேசியிருக்கிறார். துருவ் விக்னேஷின் அம்மா வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை கேட்டவுடனேயே விஜய் இன்னமும் வருந்தியிருக்கிறார். துருவ் விக்னேஷின் படத்தையும் குடும்பத்தினரின் வீடியோ காலில் காட்டவே விஜய் போனிலேயே கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

துருவ் விக்னேஷின் வீடு
துருவ் விக்னேஷின் வீடு

‘சின்னப் பசங்களை கூட்டிட்டு வர வேண்டாம்னு சொன்னேன்லம்மா…ஏம்மா கூட்டிட்டு வந்தீங்க?’ என கண்ணீருடன் கேட்டிருக்கிறார். ‘வீட்டு பக்கத்துலங்றதால உங்களை பார்த்துட்டு உடனே வந்துடலாம்னு நினைச்சு தூக்கிட்டு போனோம்.’ என குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். ‘நீங்க ஏன் சார் இன்னும் நேர்ல வரலை?’ என துருவ் விக்னேஷின் உறவினர்களில் ஒருவர் கேட்க, ‘போலீஸ்க்கிட்ட அனுமதி கேட்டிருக்கோம்மா, அனுமதி கிடைச்ச உடனேயே கட்டாயம் நேர்ல வருவேன். தைரியமா இருங்க.’ என்று விஜய் தேற்றியிருக்கிறார்.

நேற்றைய முன் தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்களாக தவெக நிர்வாகிகள் உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்றிருக்கின்றனர். அவர்கள் விஜய்க்கு லைனை கனெக்ட் செய்யவே விஜய் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அத்தனை பேரிடமும் ஆறுதல் கூறியிருக்கிறார்.

‘உங்க மேல உயிரா இருப்பானே…’

ஏமூர் என்கிற ஒரே கிராமத்தில் 5 பேர் உயிரிழந்திருந்தனர். அந்த கிராமத்தினரையும் விஜய் தொடர்புகொண்டிருக்கிறார். ப்ரித்திக் என்கிற 10 வயது பையன் ஒரு வீட்டில் இறந்திருக்கிறான். ப்ரித்திக்கின் அம்மாவிடமும் பாட்டியிடமும் விஜய் பேசியிருக்கிறார். ப்ரித்திக்கின் குடும்பத்தினரிடம் பேசினேன்.

Vijay campaign
Vijay campaign

‘இப்படி நடக்கும்னு நினைச்சே பார்க்கலம்மா. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு தெர்ல. தைரியமா இருங்க. நேர்ல வரேன்.’ எனக் கூறியிருக்கிறார். ப்ரித்திக்கின் அம்மா, ‘விஜய் மாமா…விஜய் மாமான்னு உங்க மேல உயிரா இருப்பான்ன். எங்க போணும்னு கேட்கமாட்டேன். உங்களை பார்க்கதான் போயே ஆகணும்னு நின்னான்..’ என ப்ரித்திக்கின் அம்மா துக்கம் தாங்காமல் கூறவே விஜய்யும் அதைக் கேட்டு கண்ணீர் விட்டிருக்கிறார்.

அதே கிராமத்தில் மனைவி பிரியதர்ஷினியையும் மகள் தாரணியையும் இழந்து நிற்கிறார் சக்திவேல். அவரையும் விஜய் தொடர்புகொண்டிருக்கிறார். மனைவி மற்றும் மகளின் படத்தை விஜய்யிடம் காட்டியிருக்கிறார் சக்திவேல். ‘உங்களுக்கு ஒரு அண்ணனா உங்க குடும்பத்துல ஒருத்தனா என்னைய நினைச்சுக்கோங்க. என்னைக்கும் உங்க கூட நிப்பேன். எனக்கு வேற என்ன பேசுறதுன்னே தெரியல. பெர்மிசன் கிடைச்ச உடனே உங்க வீட்டுக்கு நேர்ல வரேன்..’ என வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *