
தமிழ் சினிமாவில் இப்போதைய ‘அரசன்’ சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘எஸ்.டி.ஆர். 49’க்கு ‘அரசன்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
இன்னொரு பக்கம் அஷ்வத் மாரிமுத்துவின் படத்திலும் நடிக்க உள்ளார். ஒரே சமயத்தில் இரண்டு படங்களிலும் ஜெட் வேகத்தில் சீறிப்பாயப் போகிறது என்ற தகவலும் வருகிறது.
‘அரசன்’ படத்தின் புரோமோவின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இளமையான சிம்புவும், 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு கெட்டப்பில் அவர் நடித்துள்ளார்.
வட சென்னை பின்னணியில் உருவாகும் கதை இது. சமுத்திரக்கனி, கிஷோர் இவர்களுடன் இயக்குநர் நெல்சன் எனப் பலரும் நடித்துள்ளனர். இரண்டு ஷெட்யூல்களாக நடந்த இந்தப் புரொமோ ஷூட்டின் முதல் ஷெட்யூல் சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் ஒன்றில் நடந்தது.

இரண்டு நாள்கள் நடந்த அதன் படப்பிடிப்பில் சிம்பு, இயக்குநர் நெல்சன் மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் பங்கேற்றனர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சிம்பு நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. வளசரவாக்கம் பகுதியில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கினார்கள். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் அக்டோபர் 16ம் தேதி அனிருத்தின் பிறந்தநாளில் ‘அரசன்’ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகிறது என்கிறார்கள்.
‘வட சென்னை’யில் அமீரின் கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமான பாத்திரம் ஆகும். அதைப் போல ஒரு கேரக்டருக்கு ராணாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு எழுந்தது. ஆனால், இப்போது அந்த கேரக்டருக்கு கன்னடத்தில் இருந்து உபேந்திரா அல்லது கிச்சா சுதீப் இருவரில் ஒருவரைக் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.
கிச்சா சுதீப் இதற்கு முன் தாணுவின் தயாரிப்பில் நடித்திருப்பதால், அரசனில் அவர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என்றும் பேச்சு இருக்கிறது. ஹீரோயின்களாக சாய் பல்லவி அல்லது சமந்தா இருவரில் ஒருவரை நடிக்க வைக்க பரிசீலித்து வருகின்றனர்.

தீபாவளிக்கு மறுநாளில் படப்பிடிப்பு தொடங்குகிறது. முதல் ஷெட்யூலை முழுக்க முழுக்க லைவ் லொக்கேஷனில் படமாக்குகின்றனர். அதன் பின்னர், அரங்கத்திற்குள் படமாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் அஷ்வத்மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்.டி.ஆர். 50’க்கான படப்பிடிப்பும் தொடங்குவதற்கான திட்டமிடல்கள் நடந்து வருகின்றன. சிலம்பரசனின் இந்தப் படமும் ஜெட் வேகத்தில் ஆரம்பமாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் அகமகிழ்ந்துள்ளனர்.