
சென்னை: “காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (செப்., 08) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்தனமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.