
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை, மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்னாந் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர்.
இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருடன் இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றும் வர்த்தகக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். கெய்ர் ஸ்டார்மரை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வர்த்தகக் குழுவுடன் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தந்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்கிறோம். பரஸ்பரம் வலுவான, வளமான எதிர்காலத்துக்கான பகிரப்பட்ட நமது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளைய சந்திப்பை எதிர்நோக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.